கார்த்திக் ஆதிநாராயணன்
''சார்,
சினிமா எனும் பூதம் வாங்கி உங்களுக்கு போட்டோ எடுத்து அனுப்பியவுடன் படிக்க ஆரம்பித்து விட்டேன்.
நண்பர் ஆத்மார்த்தி முகநூல் நண்பராக இல்லாததால்,அவரது பக்கம் பின்னூட்டம் இட அனுமதிக்கவில்லை. நிஜத்தில் அவரோடு அறிமுகம் உண்டு. கண்ணே கலைமானேவில் நடிக்க அவர் வந்த போது எங்கள் இயக்குனர் அறிமுகம் செய்து வைத்தார்.
சினிமா எனும் பூதம் மூன்று வித அனுபவங்களை உள்ளடக்கியது.
1.நீங்கள் பார்த்த சினிமா
2.நீங்கள் படித்த,கேள்விப்பட்ட சினிமா
3.நீங்கள் வாழ்ந்த சினிமா
மூன்றிலும் என்னை வியக்க வைத்தது கொட்டிக்கிடக்கும் "டீட்டெயிலிங்"மற்றும் உங்களது நியாபக சக்தி. கடந்த ஆண்டு வைகை ஆற்றை பார்த்தவாறு இருக்கும் "ஷா தியேட்டரின்"பெயர் எவ்வளவு யோசித்தும் நியாபகம் வராமல் நண்பரிடம் கேட்க வேண்டியதாயிற்று எனக்கு. தியாகராஜ பாகவதர் தொட்டு நியாபகத்தில் நிறுத்தி எழுதி இருக்கிறீர்கள்.
கமல்,ஜெய்சங்கர் இருவரும் எனக்கு அழகான கதா நாயகர்கள் முன்பு. ஆனால் உங்கள் எழுத்தை படித்த பின் ஜெய்சங்கர் காமெடியனாகிப் போனார்.
வாழ்பனுவத்தில் நீங்கள் முழுமையான versatile சார். சல்லிகள் முதல் பாக்யராஜ் சார் வரை பழகியதை சொல்கிறேன்.
வைகை ஆற்று மணலில் உங்களுடன் சுற்றிய சல்லிகளாகட்டும், ஒரு elite அப்பாவின் elite மகன் வாழ்வாகட்டும்,சினிமா பழக்கங்கள் ஆகட்டும், உங்களது அந்த மதுரை satire உடன் நாற்பது ஆண்டுகளுக்கு பிந்தைய ஒரு நாளில் நாங்கள் படிக்க வேண்டி அத்தனை அனுபவங்களும் உங்களுக்கு நிகழ்ந்ததாகவே நான் கருதுகிறேன்.
கொரனா செய்த பெருங்கொடுமைகளில் ஒன்று உங்களோடான சந்திப்பு தள்ளிப் போய்கொண்டே இருப்பது.
எழுத்துகளின் ஊடாக என் மதுரை காலங்களை நீங்கள் மீட்டெடுப்பது எனக்கு பெரு மகிழ்ச்சி. அதற்கு நன்றிகள் சார்!''