தேவி காம்ப்ளக்ஸ்
- R.P. ராஜநாயஹம்
மோகன் ஹரிஹரன் கட்டிடக்கலை நிபுணராக பெரும் அநுபவம் கண்டவர் சினிமா தியேட்டர்கள் பற்றி சுவையான பல விஷயங்கள் பேசினார்.
'கொஞ்சும் சலங்கை'படம் வண்ணத்தில் பிரமாண்டமாக செலவு செய்து தயாரித்த செட்டியார் சகோதரர்கள் மெளண்ட் ரோட் சாந்தி தியேட்டரில் ரிலீஸ் செய்ய விரும்பினார்கள். சிவாஜி சகோதரர்களிடமிருந்து சாதகமான பதில் வரவில்லை. எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் "ம்ஹும்"தான். வேறு தியேட்டர் பார்க்க சிரமப்பட்டிருக்கிறார்கள். பெரும் பாடு பட்டு ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.
அதனால் செட்டியார் சகோதரர்கள் வைராக்கியம். கௌரவப் பிரச்சினை. நாமே சொந்தமாக தியேட்டர் கட்டி விட வேண்டியது தான்.
விளைவு - தேவி காம்ப்ளக்ஸ்.
இதை மோகன் ஹரிஹரன் சார் பேசிய போது கொஞ்சும் சலங்கை
தயாரிப்பின் போது நடந்த விஷயம் பற்றி நாற்பது வருடங்களுக்கு முன் சுப்ரமணிய ஐயர் என்பவர் சொன்ன தகவல்.
கதாநாயகன் ஜெமினி கணேசன் சம்பளமாக பேசிய தொகைக்கு மேல் பெருந்தொகை வாங்கி விட்டார் என்பது தெரிய வந்திருக்கிறது.
அவ்வப்போது ஹீரோ ஜெமினி கேட்ட தொகையை கொடுத்துக்கொண்டே வந்திருக்கிறார்கள்.
கணக்கு பார்த்தால் இப்படி அதிக பற்று.
காடைய காட்டுல விட்டா பிடிக்க முடியுமா?