R. நாராயணசாமி என்ற சுகுமார்.
தம்பி என்று அன்போடு விளிப்பார். கும்பகோணம் சிட்டி யூனியன் பேங்க் ஹெட் ஆபிஸில் உயர் பதவி வகித்து ஓய்வு பெற்றார்.
1981ம் ஆண்டிற்கு பிறகு பார்த்ததில்லை.
2024ல் மீண்டும் சந்திப்பு.
பெரிய குளத்தில் மத்திய அரசு துறை பணியில் இருந்த போது
சுகுமார் சிட்டி யூனியன் பேங்க்.
இருவரும் ஒரே அறையில் இருந்தோம்.
வேலை முடிந்த பின் மாலையில் நகருலா, சினிமா என்று பொழுது போக்கு. தீப்பொறி ஆறுமுகம், வெற்றி கொண்டான் அரசியல் கூட்டம் போனதுண்டு.
வடுகப்பட்டி தியேட்டரில் சோட்டி சி பாத் (அப்போதே பழைய படம்)
பரவசமாக பார்த்திருக்கிறோம்.
கண்காட்சி நடக்கும் போது நாடகங்கள் பார்க்கப் போவோம்.
அப்படி எக்ஸிபசன் சுகுமார் சாருடன் நாடகம் வேடிக்க பார்க்க போன போது
அங்கே வெள்ளசிங்கம். அப்ப நடுத்தர வயது குடும்பஸ்தர். ரொம்ப மூத்தவர்.
குடும்பம் கிராமத்தில்.
இவர் தெற்கு அக்ரஹாரத்தில் ஆறேழு பேருடன் ஜாகை.
அவரும் கூட்டம் அவ்வளவாக இல்லாத நாடகத்தை எங்கள் இருவரோடும் சேர்ந்து நின்று வேடிக்க பார்த்தார்.
வெள்ளை சிங்கம் நல்ல கருப்பாக இருப்பார். Funny ஆன தோற்றம்.
மேடை முன்னாலே மிக அருகில் நாடகத்தை
பார்த்த போது
கையில் சிகரெட்டோடு
வெள்ள சிங்கம்.
நாடகத்தில் கதாநாயகி சேலை முனையை கையால் சுற்றிக்கொண்டவாறு பேசிய வசனம்
"என்னிடம் அழகில்லையா? அறிவில்லையா? ஆனால் என்னுடைய அழகே எனக்கு ஆபத்தாக ஆகி விட்டதே"
கார்ட்டூன் போல இருந்த வெள்ள சிங்கம் நல்ல சத்தமாக கூடியிருந்த கூட்டத்திற்கு கேட்கும்படியாக கத்தி கூப்பாடு போட்டார்
"மாமா, என்ன மாமா,
இவ எனக்கு பொம்பள வேஷம் போட்ட மாதிரி இருக்கா?"