பத்மஜா நாராயணன் கவிதை 'நாய்க் கனவு'
"ஓர் அபூர்வமான
மார்கழி மழை நாளில்
வீட்டில் சரணடைந்தது
கருப்பு நாய்க் குட்டி ஒன்று.
பறந்து பறந்து
கொட்டாங்கச்சி பால் அருந்தி
தள்ளாடும் நடை மயக்க
நானறியாமல் அதன் தோழியானேன்.
அதற்கென ஒரு கிண்ணம்
படுக்க ஒரு பாய் விரிப்பு
என பழக்கியும்
பல நாட்கள்
என் கூந்தல் கதகதப்பில்
கண்ணுறங்கும்.
குழந்தையென
ஊஞ்சலாட்டி தூங்கியபின்
அதன் முகம் பார்த்து
வினாவொன்று எழும்
என்றாவது
எப்போதாவது
அதன் கனவில்
நான் வருவேனா? "
பழகாத நாயைப்பார்க்கும் போது தான் திகில், பயம். நம்மிடம் பழகும் நாய்கள் மனிதருக்கு தோழர்கள் தானே.
கூத்துப்பட்டறை தெருவில் இருக்கும் ஒரு வெள்ளை நாய் (வெள்ளக்கண்ணு என்று பெயர் வைத்திருக்கிறேன்.) முத்துசாமி சாருக்கும் எனக்கும் நல்ல நண்பன். எப்போதும் இதற்காக பொறை போடுவேன். சார் அவ்வளவு சந்தோஷப்படுவார். ”இதோட பேர் என்ன சொன்னீங்க” என்று அடிக்கடி கேட்டுக்கொள்வார். குஞ்சலி மாமி கூட பொறை தருவார்.
முத்துசாமிக்கும் பூனைகளுக்குமான பந்தம் பூர்வ ஜென்ம பந்தம். அது பற்றி தனியாக எழுதவேண்டும்.
இப்போது வெள்ளக்கண்ணு என்னைப்பார்த்தவுடன் கூடவே வருகிறது. A very interesting one. இதற்காகவே நான் பட்டறையில் பொறை எப்போதும் வைத்திருப்பேன்.
சென்ற வருடம் வரை எதிர்த்த வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஒரு கறுப்பு பெண் நாய்.
ப்ளாக்கி என்று பெயர்.
அதை முத்துசாமி சார் ஒரு நாளில் பல முறை கூப்பிடுவார். ஓடி வந்து
அவர் காலடியில் உட்கார்ந்து விடும்.
அதற்கு எப்போதும் பொறை வீட்டில் இருக்கிறதோ இல்லையோ அப்போது என்னிடமிருந்த ஸ்கூட்டரில் இருக்கும். பொறை போடும் போது சார் முகம் மலர்வதை பார்க்க வேண்டும்.
அவ்வளவு சந்தோஷப்படுவார்.
அதன் பாய் ஃப்ரெண்ட் தான் வெள்ளக்கண்ணு.
நல்ல வெள்ளை நிறம். அதனால் வெள்ளைக்கண்ணு என்று பெயர் வைத்தேன்.
ப்ளாக்கியை பார்க்க பட்டறைக்கே வந்து விடும்.
வெள்ளக்கண்ணு இருக்கும்போது பொறை போட்டால் ப்ளாக்கி எப்போதும் வாய் வைக்காது.“அதிதியை கவனியுங்க” என்ற தோரணையில் இருக்கும்.
வெள்ளக்கண்ணு பொறைகளை அவுக்கு, அவுக்குன்னு தின்னும்.
குஞ்சலி மாமி சொல்வார் "ராஜநாயஹம், உங்களுக்கு பைரவர் கடாட்சம், அருள்
நிறைய்ய கிடைக்கும்"
ஒரு நாள் நான் சாரோடு வீட்டுக்குள் இருக்கும் போது “ ஐயய்யோ” என்று பதறிப்போய்
மிக சத்தமாக சொன்னார்.
ப்ளாக்கியை அதன் எஜமானரே ஆட்கள் மூலம் பிடித்து ஒரு வேனில் ஏற்ற முயற்சித்த போது பட்டறைக்குள் ஓடி வந்து விட்டது.
சார் விடாமல் ’ஐயோ, ஐயோ’ என்று கத்தினார்.
நாயின் எஜமானரும், எஜமானியும் என்னிடம்
“ அதற்கு தோல் வியாதி. ட்ரீட்மெண்ட் முடிந்தவுடன் மீண்டும் வீட்டுக்கு வந்து விடும்.” என்றார்கள்.
சாரிடம் இதை சொல்லி சமாதானப்படுத்தினேன்.
அந்த நாய் வேனில் கட்டி ஏற்றப்பட்ட போது என்னை பரிதாபமாக பார்த்த பார்வை… Its eyes had the power to speak a great language.
அப்போது என்னருகில் இருந்த
இஸ்ரேலி ஜென் மாஸ்டர் கில் ஆலன்
“ I suspect it’s a lie. They won’t bring the dog back,
I think” என்று சொன்னது தான்
உண்மை என்றாயிற்று.
ப்ளாக்கி திரும்பி வரவேயில்லை.
வெள்ளக்கண்ணு அந்த கறுத்தம்மா ப்ளாக்கி இழப்பை எப்படி தாங்கிக்கொண்டதோ தெரியவில்லை.
மறைந்து விட்ட முத்துசாமி சாரையும் தான் வெள்ளக்கண்ணுவால் கூட மறக்க முடியுமா?
தெருநாய் என்பதால் அவ்வப்போது அதன் முகத்திலும், காது, உடல் பகுதியில் காயங்கள்
காணக்கிடைக்கும்.
'யாருடா ஒன்ன அடிச்சா? 'எனும் போது பரிதாபமாக பார்க்கும்.
ஒரு நாள் ஒரு அம்மாள் கையில் குச்சியோடு
அதை விரட்டிக் கொண்டு ஓடி வந்தாள்.
'அம்மா, பாவம்மா அடிக்காத 'என்று நான் சொன்ன போது
'சார், சாப்பாட்ட தட்டுல இருந்து தட்டி விட்டுடுச்சு சார் 'என்றாள் அந்த அம்மாள்.
கூத்துப்பட்டறையிலிருந்து நான் வெளியேறி
இப்போது ஒரு வருடம் ஓடி விட்டது.
அங்கே அந்த தெரு நாய்
வெள்ளைக்கண்ணு எப்படியிருக்கிறதோ?
"வெள்ளைக்கண்ணு,
உன் கனவில் நான் வருகிறேனா?"
மிலன் குந்தேரா சொன்னது போல
“Dogs are our link to paradise.”
..