"மணல் கோடுகளாய்" மீதான
சிவகுமார் கணேசன் பார்வை
மணல் கோடுகளாய்……
R.P.ராஜநாயஹம்
யாவரும் பப்ளிஷர்ஸ்
பாதுகாப்பான அரசாங்க உத்தியோகத்தை ராஜினாமா செய்து விட்டு அழைத்தால் வருவேன் என்ற திரைப்படம் வழியாகத் திரைப்படத் துறைக்கு வந்து,பாக்யராஜிடம் அஸிஸ்டென்டாக இருந்து,சொந்தத் தொழில்கள் பார்த்து, பிறரிடம் வேலை செய்து மதுரை, திருச்சி, பழனி,பாண்டிச்சேரி,சென்னை என மாறிக் கொண்டேயிருந்து யார் யாரிடமோ கேட்டு கடைசியில் அத்தனை சாமி ஒண்ணா சேர்ந்து ஆன முத்துசாமி அரவணைத்த,செய்துங்க நல்லூர் சாராயக்கடை ராஜநாயகம் பிள்ளையின் பேரனான R.P.ராஜநாயஹம் தன் வரலாறு கூறும் வாழ்க்கைச் சம்பவங்களின் தொகுப்பு.
இவரது வயலில் விவசாய வேலை பார்த்து மொதலாளி மொதலாளி என்று விசுவாசமாய் இருக்கும் மாரியப்பனுடன் நகர்வலம் போகும் போதுதானா
சப் இன்ஸ்பெக்டர் வெள்ளைச்சாமி வர வேண்டும். மாரியப்பனாவது,காளியப்பனாவது எடுத்த ஓட்டம் வீட்டில் வந்துதான் முடிகிறது. பின்னாலேயே ஓடி வந்த மாரியப்பன், போலீஸ்னா எனக்கு ரொம்ப பயம் மொதலாளி.அடி பிச்சிப் போடுவானுங்க. மொதலாளி போலீஸ்னா எனக்கு ரொம்ப பயம் பாத்துக்கிடுங்க.இந்தப் போலீஸ்காரப் பயலுகள எனக்கு லல்லுசா பிடிக்கவும் செய்யாது பாத்துக்கிடுங்க என்று சொல்வதைக் கேட்டு அப்படிச் சிரித்தேன்.
ஒன்றாம் வகுப்பு படிக்கும் பேரனைத் தூக்கி வைத்துக் கொண்டு திருச்செந்துர் பேருந்தில் பேரன் சிரமப்பட்டதற்காக, 'என்னல அவன் வண்டி ஓட்டுதான்'என்று ஓட்டுநரைத் திட்டும், சன்னதம் வந்தது போல் சாமி கும்பிடும்,
'பவுண்டு வீட்டுக்காரன ஜெயிலுக்கு அனுப்பு முருகா.அவன் நல்லவனே இல்ல பாத்துக்க'என்று தண்டிக்க வேண்டும், பந்தலைப் பிரித்ததற்காக கல்யாணம் செய்து வைக்கச் சொல்லி அடம் பிடித்த பேரனை இடுப்பில் வைத்துக் கொண்டு ஊரிலுள்ள எல்லோரிடமும்
எனக்கும் என் பேரனுக்கும் கல்யாணம் என்று சொல்லி, பந்தலைத் திரும்பப் போட வைக்கும், சொல்லியபடி யாருக்கும் சிரமம் தராமல் இறந்து விடும் ஆச்சி, ராஜநாயஹத்தின் வார்த்தைளில் அழியாச் சித்திரமாக நம்முள் பதிந்து விடுகிறார்.
மிகப் பெரிய இழப்புகளை, சரிவுகளை, உடன் இருந்தவர்கள் கழுத்தறுத்ததை, அவமானங்களை, துரத்தும் வறுமையை நாமெல்லாம் சொன்னால் பெரும்பாலும் புலம்பல்களாகத்தானே
இருக்க முடியும். ஆனால் தங்கள் வாழ்க்கையில் நடந்த பிரச்சனைகள், சம்பவங்கள்,முக்கியமாக தாங்கள் எப்படித் தோற்றோம் என்பதை சிரிக்க சிரிக்கச் சொல்ல இவர்களால் முடியும் என்று இவரைப் பற்றி கி.ரா.அய்யா சொல்வது உண்மை என்பதை வாசிக்கும் அனைவருமே உணர முடியும்.
ஆனாலும், அவரது பிரியமான ஆச்சி இறந்த போதும், அவரது அம்மா இறந்த செய்தி கிடைத்தும் குழந்தைகளிடையே பாடல் பாடி வகுப்பெடுக்கிறாரே அப்போதும்,
திருப்பூர் பனியன் கம்பெனியில்
வேலைக்கு பையனை ஒப்படைக்கும் போதும் அவருக்கும் வாசிக்கும் நமக்கும் தொண்டை அடைக்கிறது. கண்கள் கசிகிறது.
ராஜநாயஹம் பற்றி, அவரது வாழ்வு பற்றி,
அவரது புலமை பற்றி தமிழ் கூறும் நல் உலகின் ஆகச் சிறந்த ஆளுமைகளின் கருத்துகள்
பின் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன.
அத்தனை துயரங்களும் மறைந்து
உங்கள் வாழ்வில் நல் ஒளி வீசீட்டும் சார்.
அதையும் எழுதுங்கள்.
வாசிக்கக் காத்திருக்கிறோம்.
...
https://m.facebook.com/story.php?story_fbid=3008816672665112&id=100006104256328