புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி,
தொ. மு. சி. ரகுநாதன் மூன்று பேரும் பேசிக்கொண்டிருக்கும் போது புதுமைப்பித்தன் "தமிழ் நாட்டில் இன்று யாருக்கு ஐயா கதை எழுத வருகிறது, நம் மூன்று பேரைத் தவிர்த்து?"
இப்படி சொல்லி விட்டு அரை நிமிட மௌனத்திற்கு பின் வாய் விட்டுச் சிரித்தவாறு தடாலடியாக சொன்னாராம் "நம் மூன்று பேர் என்று தாட்சண்யத்துக்காகத் தான் சொன்னேன். என்னைத் தவிர்த்து யார் கதை எழுதுகிறார்கள்?"
கு. அழகிரிசாமி, ரகுநாதன், அங்கிருந்த இன்னும் இருவர் எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்.
அழகிரிசாமியே இதை
கல்மிசமின்றி எழுதியிருக்கிறார்.
அழகிரிசாமி கதைகள் மீது பெரு மதிப்பு கொண்டிருந்தவர் புதுமைப்பித்தன்.
'வெந்தழலால் வேகாது'என்ற அழகிரிசாமி கதையை புதுமைப்பித்தன் தான்
கலைமகள் பத்திரிகையில் வெளிவரச்செய்தவர். கு. அழகிரிசாமி பற்றி "என் எதிர்கால நம்பிக்கை"என்று புதுமைப்பித்தன் பெருமிதம் கொண்டிருந்தார்.
கு. அழகிரிசாமி கதைகளுக்கு பழ. அதியமான் எழுதிய முன்னுரையில் இப்படி பல விஷயங்களைச் சொல்கிறார்.
'வெந்தழலால் வேகாது 'கதையில்
நக்கீரன், நெற்றிக்கண் சுந்தரர் சமாச்சாரம்.
அகத்தியர், கபிலர், பரணர், தருமி எல்லாம் கதாபாத்திரங்கள். 1946ல் அழகிரிசாமி எழுதியிருக்கிறார்.
"பள்ளியறையிலே வைத்து ஒருவன்
தன் மனைவியின் நகத்துக்குக் கூட
இயற்கை மணம் இருக்கிறது என்று புகழலாம். அப்படிப்பட்ட விஷயங்களை பௌதிக சாஸ்திர உண்மையாக்கி விட சிவன் இவ்வளவு பயங்கரமான நடவடிக்கையைக் கைக்கொண்டது மிகவும் அருவருப்பாக இருக்கிறது "என்று பரணர் வயது முதிர்ந்த கபிலரிடம் சொல்கிறார்.
புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் ஆகியோர் எழுத்தை உயர்வாக கருதியவர் அழகிரிசாமி.
மௌனி, லாசரா எழுத்து அவருக்கு பிடிக்காது.
அழகிரிசாமி மகன் சாரங்கன் ஒரு சின்ன படம் மௌனி பற்றி எடுத்தார். Generation gap?
105 சிறுகதைகள் எழுதியுள்ள அழகிரிசாமி
ஒரு 35 கதைகள் என்ற அளவில் தான் கரிசல் மண்ணை வைத்து எழுதியிருக்கிறார். மற்ற கதைகள் அவருடைய பரந்து பட்ட அனுபவங்களின் சாரத்தில் விளைந்தவை.
சிறுகதைகளில் சாதனை செய்தவர். அவர் எழுதியதாக நாவல்கள் வந்திருக்கின்றன.
நாற்பது வருடங்களுக்கு முன்பு ஒரு பேராசிரியர் அந்த நாவல்களைப் பற்றி துடுக்காக "ஒரு வேளை அழகிரிசாமி மனைவி சீதாம்மா இந்த நாவல்களை எழுதியிருக்கிறாரோ, என்னமோ?"என்று என்னிடம்
மதுரை மீனாட்சி நிலையத்தில் பேசும் போது சந்தேகம் தெரிவித்தார்.
அ.சீதா என்ற பெயரில் அழகிரிசாமி கட்டுரை எழுதியவர் தான்.
தி. ஜானகிராமன் நாவல்களிலும் சாதித்தது போல அழகிரிசாமியால் சாதிக்க முடியவில்லை.
..