விளாத்திகுளம் சாமிகளின் நண்பர் சங்கீத ஞானி மதுரை மாரியப்ப சுவாமி.
இவரிடம் அநேக கீர்த்தனைகள் பயின்று
கிட்டப்பா பாடினார்.
அற்பாயுளில் இருபத்தேழு வயதில் மறைந்த துர்பாக்யசாலி கிட்டப்பா.
கே. பி. சுந்தராம்பாளின் கணவர்.
இந்த மதுரை மாரியப்ப சுவாமிகள் பற்றி
ஒரு முக்கிய தகவல்.
வயிற்று வலி வேதனையால்
சொல்லொணா துன்பத்தை
மாரியப்ப சுவாமிகள்
அனுபவித்து துடித்திருக்கிறார்.
கடைசியில் திருச்செந்தூர் முருகனிடம் நேர்ந்து வேண்டிக்கொண்டார். வயிற்று வலி குணமான வுடன் நேர்ச்சி கடன் செலுத்தினார்.
தன் நாக்கை அறுத்து காணிக்கை செலுத்தினார்.
தன் சங்கீதத்தை, பாடும் திறனை
தியாகம் செய்திருக்கிறார்.
தோடி சீத்தாராமையர் என்று ஒருவர்.
விளக்கம் தேவையில்லை.
தோடியை அடகு வைத்து
தன் கஷ்ட காலத்தில் பணம் பெற்று
குடும்பம் நடத்தியிருக்கிறார்.
அடகில் தோடி இருக்கும்போது
கச்சேரியில் தன் பிரிய ராகம் பாடமாட்டார்.
சங்கராபரணம் நரசய்யரும் இதே கதை தான். சங்கராபரணத்தை அடகு வைத்து விட்டு கச்சேரிகளில் சங்கராபரணம் பாட முடியாமல் தவித்திருக்கிறார்.
அப்படி ஒரு காலம். அப்படிப்பட்ட பிறவிகள்.
……………