ராஜா ஹஸன்
சினிமா எனும் பூதம் பாகம் 2 நூல் பற்றி
#reading_marathon2024
RM096
21/30
சினிமா எனும் பூதம் (பாகம்- 2)
ஆசிரியர் R.P.ராஜநாயஹம்
பக்கங்கள் 220
விலை ரூ 240/
முதல் பதிப்பு செப்டம்பர் 2022
தோட்டா கம்பெனி வெளியீடு
தொடர்புக்கு 97905 91038
-----------------------------------------------------------------
கலைஞரின் முரசு தொலைக்காட்சியில் 'சினிமா எனும் பூதம்' நிகழ்ச்சியைக் கடந்த இரண்டரை வருடங்களாக வழங்கி வரும் எழுத்தாளர் R.P. ராஜநாயஹம் அவர்களின் புத்தகம்.
R.P. ராஜநாயஹம் எழுத்தாளர் ,இலக்கிய ஆர்வலர், கூத்துப்பட்டறை நிகழ்த்துக்கலை ஆசிரியர், சினிமாவில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர், மேடை நாடக இயக்குநர், நடிகர் என பன்முக ஆளுமைத் திறன் மிக்கவர்.
நூலாசிரியரைப் பொறுத்தவரை தான் வாசித்ததை மட்டுமல்ல கண்டு, கேட்டு, உணர்ந்து, அனுபவித்ததை, அனைத்தையும் எழுத்தில் சுவாரஸ்யமாக படிப்போர் ரசிப்பது போல எழுதுவது எல்லோருக்கும் சாத்தியமானது அல்ல.
பரந்துபட்ட வாசிப்பு அனுபவம், இசை அறிவு, ரசனை உயர்தரமானது மட்டுமல்ல உண்மையானதும் உன்னதமானதும் கூட.
எப்படி இந்த மனிதரால் ஜெயகாந்தனைப் பற்றியும் அதே வேளையில் நடிகை ஜோதிலட்சுமி பற்றியும் எழுத முடிகிறது என நாம் வியப்படைகிறோம்.
போர்ஹேவின் சிறுகதையை மிகவும் சிலாகிக்கும் இவரால் டி.எஸ் பாலையாவின் குடும்ப உறவுகளைப் பற்றியும் சுவாரசியமாகப் பேச முடிகிறது.
R.P. ராஜநாயஹம் படைப்புகள் தற்பொழுதுதான் தொடர்ந்து புத்தகங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அந்த வரிசையில் சினிமா குறித்த இந்த பாகம்-2 புத்தகத்தில்
திரையுலக ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள் மிகவும் செறிவுடனும், நகைச்சுவையுடனும் இதுவரை எங்கும் கேள்விப்பட்டிராத புதிய தகவல்களுடனும் வெளிவந்திருப்பது மிகவும் சிறப்பு.
அதே வேளையில் புகழின் உச்சியில் இருந்த'கிழக்கே போகும் ரயில்'நடிகர் விஜயன் வீழ்ந்த கதையை வறுமை நிலையை வாசிக்கையில் மனம் கலங்கிப் போய் விடுகிறது.
1980களில் கவர்ச்சி நடிகைகள் என்ற கட்டுரையில் பிரதமர் இந்திராகாந்தியே புன்னகையுடன் "Who is this Silk?!"என்று சில்க் ஸ்மிதா பற்றிக் கேட்டதாகவும், அத்துடன் விரியும் காட்சிகளில் கவர்ச்சி நடிகைகளுக்கு என்று இருந்த காலம் குறித்த தகவல்களில் வரும் ஜோதிலட்சுமி, ஜெயமாலினி, அனுராதா வரிசையில் குடும்பப்பாங்கான நடிகையர் திலகம் சாவித்திரி கூட விரசம் தெரிய"சுழி"என்ற மலையாள படத்தில் நடித்திருக்கிறார் என்ற தகவலுடன் தமிழ்த் திரையுலகம் கண்ட முதல் கவர்ச்சிக் கன்னி டி .ஆர் ராஜகுமாரி குறித்த செய்திகளும் அடக்கம்.
கிசுகிசு என்ற வார்த்தையை தமிழுக்குக் கண்டுபிடித்துக் கொடுத்துப் பிரயோகம் செய்து பிரபலமாக்கியது குமுதம் வார இதழ் தான்.. It is Whispered என ஆங்கிலத்தில் சொல்வார்கள் .. கிசுகிசு வில் அடிபட்ட அன்றைய தமிழ்த் திரைக் கலைஞர்கள் பற்றிய அத்தியாயத்தில் ஆசிரியர் விவரிக்கும் சம்பவங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன.
கூகுள் சர்ச் இல்லாத காலத்திய தகவல்கள் எல்லாம்
R.P. ராஜநாயஹம் அவரின் மூளை அடுக்குகளுக்குள் பத்திரமாக இருந்து அவ்வப்போது வெளிப்படும் தன்மை ஒரு அற்புதம்.
இசை விமர்சகர் சுப்புடு குறித்த செய்திகள். நடிகர் எம் எஸ் பாஸ்கர் அவர்களின் தந்தை முத்துப்பேட்டை சோமு குறித்த தகவல்களை நினைவடுக்குகளில் இருந்து எவ்வளவு அழகாக மீட்டுருவாக்கம் செய்து எழுதியுள்ளார் என்ற வியக்கத் தோன்றுகிறது.
ஜி.கே.தர்மராஜ் என்ற தற்செயல்(!) சினிமா தயாரிப்பாளர் சிவாஜியை வைத்து படம் தயாரித்த கதை.. அத்துடன் முதல்வரான எம்ஜிஆரை எப்படியோ பிடித்து'உன்னை விடமாட்டேன்'என்ற படத்திற்கு இளையராஜா இசையமைப்பில் பூஜை என தினத்தந்தி விளம்பரம் கொடுத்தவர்.( முதலமைச்சராக இருப்பவர் சினிமாவில் நடிக்கலாமா என்ற கடும் சர்ச்சையைத் தொடர்ந்து எம்ஜிஆர் நடிக்கிற ஆசையை ஓரம் கட்டினாராம்!!)
கற்ற வித்தை மூலம் எல்லோரும் பெரும் சம்பாத்தியம் செய்து விடுவதில்லை. அதற்கு அஷ்டலட்சுமிகளில் ஒருத்தியான வித்யா லட்சுமியின் அருள் வேண்டும் என்பது ஐதீகம். சிவாஜி கணேசனுக்கு வித்யா லட்சுமி அருள் பரிபூரணமாக கிடைத்தது. அதற்கு முன்னர் அவரது நிலை என்ன என்பதை அறியவும் முடிகிறது.
ஜெமினி ஸ்டுடியோவில் பணிபுரிந்த எழுத்தாளர் அசோகமித்திரனின் கசந்த நினைவுகள் என்ற தலைப்பில் அன்றைய முதலாளி எஸ் எஸ் வாசன் குறித்த தகவல்கள் அவரது அதிரடியான அணுகுமுறை குறித்தவைகளே தமிழ் இலக்கியத்திற்கு அசோகமித்திரனின் ஜெமினி வாழ்க்கை அனுபவங்களாகக் கிடைத்ததைக் குறிப்பிடுகிறார்.
'கரைந்த நிழல்கள்' ராம அய்யங்கார் பாத்திரம் முதல் 'மானசரோவர்'ஸ்டுடியோ முதலாளியும் வாசன்தான்.
ஜெமினி - சாவித்திரி தம்பதிகள் குறித்த கட்டுரையில் வெளிப்படும் விஷயங்கள் அதன் தன்மை குறித்து நாம் ஆராயத் தேவையில்லை. 'கத்தரிக்காய் முத்தினா சந்தைக்கு வந்து தானே ஆகணும்'என்ற மனநிலை.
ஜெமினி கணேசனின் திருவிளையாடல்களில் வாழ்வின் கடைசி அத்தியாயம் ஜூலியானா. அவரிடமிருந்து தன் அப்பாவை மீட்டு மகள் டாக்டர் கமலா செல்வராஜ் ஜி. ஜி ஹாஸ்பிடல் வைத்திருந்தபோது ஜெமினியின் அறைக்கு வெளியே ஒரு போர்டு தொங்கியதாம்.
"Ladies Not Allowed"அறிவிப்பு அன்றைய காதல் மன்னனின் இழிவான வீழ்ச்சியா சபலம் நிறைந்த தந்தையை பாதுகாக்க வேண்டுமே என்ற அவருடைய மகளின் பரிதவிப்பின் வெளிப்பாடா?
ஹாலிவுட் படங்கள் குறித்த ஆசிரியரின் கட்டுரைகளில் பரந்துபட்ட ஆங்கிலப் புலமை கண்டு வியக்கிறோம். டாக்டர் ஷிவாக்கோ 1965ல் வந்த படம். மிகச் சுருக்கமாக திரைப்படத்தைப் பற்றி ஆசிரியரின் பார்வை அபாரம்.
ஆச்சி மனோரமா குறித்த இரங்கல் கட்டுரையில் அவருக்கே தெரியாத பல கதாபாத்திரங்கள் பற்றி ஆசிரியர் சிலாகித்திருக்கிறார் எனலாம்.
நீண்டகாலமாக ஒரே வேலையை செய்யும் போது ஒரு செக்குமாட்டுத் தனம் வந்துவிடும் .ஆனால் மனோரமாவின் நடிப்பில் அது கிடையாது என்பது விசேஷம். அதோடு திரையில் பாடிய நடிகை .இந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.
Family Tree குறித்த கட்டுரைகளில் இன்னாருக்கு இன்னார் உறவு, அவருக்கு இவர் என்ன உறவு என்ற செய்திகளை நூல் பிடித்து ஆசிரியர் எழுதிச் செல்லும் விதம் எங்கும் கேள்விப்படாதது.
மதுரை தியேட்டர்கள் குறித்த பதிவில் அன்றைய திரை அரங்கங்கள் குறித்த நினைவுகள் என்றும் அழியாது என்று ஆசிரியர் குறிப்பிடுவது தியேட்டருக்கும் அவருக்கும் உள்ள பிணைப்பை குறிக்கிறது எனலாம்.
இங்கு நான் குறிப்பிட்டிருப்பது ஓரிரு அத்தியாயங்களை மட்டுமே. க்ளிஷேவாக இருந்தாலும் 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் 'என்பதைத்தான் இங்கு உபயோகப்படுத்த வேண்டும்.
இந்த சினிமா எனும் பூதம் பாகம்-2 புத்தகத்தை வாசிக்கும் போது, எவ்வளவு ஆளுமைகள் அவர்களுக்கான அனுபவங்கள் மட்டுமல்லாமல்,
R.P ராஜநாயஹத்துக்கு மட்டும் எப்படி இப்படி அனுபவங்கள் அமைகின்றன.. என நம்மை வியப்பில் ஆழ்த்தும் மாயம்.
பலரும் மறந்த சினிமா கலைஞர்களைக் குறித்த நினைவு கூறல் இந்தப் புத்தகம்.
இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கும் தோட்டா ஜெகன்... மிகவும் அருமையான உயர்ந்த அச்சுத் தரத்தில்,சிறந்த வடிவமைப்பில் வெளியிட்டிருப்பதை அவசியம் குறிப்பிட வேண்டும்.