அன்று வீட்டை விட்டு வெளியே கிளம்பிய போது அதை எதிர்பார்த்திருக்கவில்லை. திருச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மறைவு காரணமாக இடைதேர்தல் பிரச்சாரம் சூடு பரத்திகொண்டிருந்தது. புத்தூர் நாள் ரோட்டில் கம்யுனிஸ்ட் கட்சி கூட்டம். நாடோடி பாடல்கள் நிகழ்ச்சியும் இருந்ததால் அங்கே போனேன். பாடல்களை கேட்டுக்கொண்டு ஓரமாக நின்று கொண்டிருந்தேன்.
கார் வந்தது. தோழர் ஆர் .நல்லகண்ணு இறங்கினார்.
தொடர்ந்து தோழர் வீ.ந.சோமசுந்தரம் இறங்கினார். சோமசுந்தரம் பார்த்து விட்டார்.
உடனே கையைப் பிடித்து அழைத்து தலைவர் நல்லகண்ணுவிடம்
"இவர் தான் R.P. ராஜநாயஹம்"என்று உணர்ச்சி பூர்வமாக என்னைப்பற்றி பெருமைபடுத்தி கொஞ்சம் சொல்லி,
தலைவர் நல்லகண்ணுவும்
"R.P. ராஜநாயஹம் "என்று சொல்லி புன்னகைத்தார்.
இதோடு முடியவில்லை. தலைவர் அருகிலேயே என்னை தோழர் சோமசுந்தரம் வற்புறுத்தி உட்கார வைத்துவிட்டார். ஒரு மணி நேரத்திற்கு மேல் நாடோடி பாடல் நிகழ்ச்சி அதன் பின்னும் நடந்தது. வேறு பல கட்சி அரசியல்வாதிகள் பலரும் அங்கு
வந்த போதும் என்னை எழ விடவில்லை.
ஜீன்ஸ் பாண்ட், டி ஷர்ட் அணிந்து அமர்ந்திருந்தேன்.
பாதுகாப்பு போலீஸ் அதிகாரி
"யார் இவர்?"- விசாரித்துக்கொண்டிருந்தார்.
ஜே ஜே டிவிகாரர்கள் படம் பிடித்துக்கொண்டார்கள்.
இடையில் நல்லகண்ணு கண்ணில்
சிறு பூச்சி விழுந்து விட்டது. ஊதி விட்டேன்.
நாடோடி பாடல்கள் முடிந்து தலைவர் மேடையேறிய போது தான் வீ.ந.சோமசுந்தரம் சொன்னார் "இந்த இடத்தில் அவருடன் உட்கார தகுதியானவர் நீங்கள் மட்டுமே. வேறு எவனாவது அவர் அருகில் அமர்ந்துவிடக்கூடாது என்று தான் உங்களை அமர்த்தினேன் "
.....
மீள் பதிவு 2008