சசிகலா பொதுச்செயலாளர் ஆன போது மக்கள் எதிர்ப்பு கிடையாது. ஆனால் முதல்வர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட போது தான் மக்கள் எதிர்ப்பு ஏற்பட்டது என்பதாக பன்னீர் செல்வம் தந்தி டிவி பேட்டியில் சொல்லியிருந்தது உண்மைக்கு எதிரானது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
ஏனெனில் ஜெயலலிதா இறந்த பின் சசிகலா பொதுச்செயலாளர் ஆனதிலிருந்தே அதிருப்தி மிகப்பெரிய அளவில் எல்லா மட்டத்திலும் ஏற்பட்டு விட்டது. அத்தோடு அப்போதே முதல்வராவது தான் அவரது உடனடி இலக்கு என்பதும் தெரிந்தே இருந்தது.
பன்னீர் தன்னை அவமானப்படுத்தி விட்டார்கள் எனபதே மிகப்பெரிய ஜோக். எப்பய்யா உன்ன அதிமுகவில கனப்படுத்தியிருக்காங்க!?
சீவி சிங்காரிச்சு, சிங்காரிச்சு மூக்கறுத்துக்கிட்டே தானே இருந்தாங்க.
கருப்பட்டி குடுத்துட்டு, செருப்பால அடிச்சிக்கிட்டே தான்....
ஒரு கல்யாண வீட்டில் பந்தி நடக்கும்போது பெண்ணின் அப்பாவின் ஒரு புறத்தில் மாப்பிள்ளையின் உறவினர் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பார். இதை கவனிக்காமல் மறு புறத்தில் உட்கார்ந்திருக்கும் தன் நண்பரிடம் பாமர மாப்பிள்ளை வீட்டார் பற்றி திட்டிக்கொண்டே இருப்பார். இங்க பாருய்யா சரியான காட்டுமிராண்டி கூட்டம்யா இது என்று இரண்டு கையாலும் சாப்பிடும் ஒருவனை சுட்டிக்காட்டுவார். அப்பளத்தை அடுக்கி கையால் குத்தும் ஒருவனை காட்டி பொருமுவார். ’இப்படி தரமில்லாத இடத்தில் பொண்ணை கொடுத்துட்டேனே.. என்னய்யா என் தலையெழுத்து…’. அதை மாப்பிள்ளை உறவினர் நன்கு கேட்டுக்கொண்டே “ இரு, உன்னை வச்சிக்கிறேன்” என்ற சைகையுடன் பெண்ணின் அப்பாவைப் பார்த்து கறுவிக்கொண்டே, பரிமாறுபவர்களிடம் ”யோவ் சாம்பார ஊத்துய்யா” ”யோவ் நெய் ஊத்துய்யா” “ ரசம் ஊத்துய்யா” “அப்பளம் இன்னொன்னு கொடுய்யா” “கூட்டு இன்னும் வை” ”மோர் கொண்டாய்யா” “ பாயாசம் எங்கய்யா” வேக, வேகமாக சாப்பிட்டு விட்டு இலையை மூடி விட்டு பெண்ணின் அப்பாவின் அருகிலிருந்த மாப்பிள்ளை வீட்டு ஆள் எழுந்து சொல்வான் “யோவ்! மாப்பிள்ளை வீட்டு ஆள் அவ்வளவு பேரும் எந்திருங்கய்யா. என்னய்யா மானங்கெட்ட சாப்பாடு வேண்டிக்கிடக்கு. நானும் பந்தியில உக்காந்ததுல இருந்து பாத்துக்கிட்டு இருக்கேன் மாப்பிள்ளை சொந்த பந்தத்தை கண்ட படி இந்த பொண்ணாட அப்பா திட்டிக்கிட்டே இருக்கான். அவ்வளவு பேரும் எந்திரிங்கய்யா. இன்னக்கி ரெண்டுல ஒன்னு பாக்கணும்”
ஜெகஜீவன் ராம் இருபத்தைந்தாண்டுகள் அரசாங்க உத்தியோகம் பார்ப்பது போல காங்கிரஸில் இருந்து மந்திரி உத்தியோகம் பார்த்தவர். எமெர்ஜென்சி காலத்திலும் மத்திய மந்திரியாய் இருந்து விட்டு பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் கடைசியில் கட்சியை விட்டு வெளியேறி
'Congress for Democracy 'கட்சி ஆரம்பித்து ஜனதாவுடன் கூட்டு சேர்ந்து இந்திரா காந்தியை எதிர்த்தவர்.
அப்போது "இந்தியாவின் பிரதமர் ஆவீர்களா?"என நிருபர்கள் கேட்ட போது பவ்யமாய், அடக்கமாய் சொன்னார் : “I never shirk any responsibility this country wants me to shoulder.”
முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் மீரா குமாரின் தந்தை!
இந்த பாபு ஜெகஜீவன் ராம் ஞாபகம் வருகிறது ’பவ்யம் பாவ்லா’ பன்னீர் செல்வத்தை பார்க்கும் போது.
’இப்பவாவது கலகம் செய்யனும்னு பன்னீருக்கு தோண்றியதே’ என்ற ஆசுவாசத்திற்கு இடையில் இதெல்லாம் நினைக்க வேண்டியிருக்கிறது.
வீரமணியும், சுப்ரமண்ய சுவாமியும், திருமாவளவனும் சொல்வது “உடனே சசிகலாவை ஆட்சி அமைக்க கவர்னர் கூப்பிடனும்”
கவர்னர் இப்படி தாமதப்படுத்துவது நல்லது தான். கூவத்தூர்(ஊர் பெயரே தமிழக அரசியலை பகடி செய்கிற metaphor போல இருக்கிறது!) இதனாலாவது அதிமுக எம்.எல்.ஏக்கள் புழுக்கம் தாங்காமல் வெளியேற வாய்ப்பு இருக்கிறது. அங்கே இருந்து அவர்கள் வெளியேறி ஒரு ‘சிதறல்’ நடந்தால் நல்லது.
கவர்னர் உடனடியாக எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதே மிகச் சிறந்த நிர்வாக நடவடிக்கையாக இருக்க முடியும்.
சசிகலாவுக்கு எதிரான மன நிலையில் ஒட்டு மொத்த தமிழகமும் இருக்கிறது.
சசிகலாவின் பதற்றம் – “ சீக்கிரம் என்ன மனையில தூக்கி வைங்களேன். இதுகள எத்தன நாள் என்னால கட்டி மேய்க்க முடியும்”
ஜில்ப்பு ஜிப்பான் ஜிப்பான் ஜலாபத்ரி ரெய்டு. ’குப்பு, குப்புன்னு வேர்க்க விடுறாய்ங்களே தவிர கொஞ்சம் கூட காய விடவே மாட்டேங்கிறானுங்களேம்மா..’
கூந்தல விரிச்சிப்போட்டு, செலம்ப ஒடச்சி “ அத்தனையும் மாணிக்கப்பரல்டா டேய்!”
ஒத்த மொலய பிச்சி வீசி.. பத்திக்கிட்டு எரியுது!
கவர்னருக்கு பகீரங்க மிரட்டல்”ஓரளவுக்கு பொறுமை காப்போம். பிறகு செய்ய வேண்டியதை செய்வோம்”
கவர்னரை வலுக்கட்டாயமாக தூக்கிக்கொண்டு போய் அப்பல்லோவில் அட்மிட் பண்ண மாஸ்டர் பிளான் ஏதாவது வைத்திருக்கிறார்களோ என்னமோ?
ஆட்சியை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தாமல் உடனே தேர்தல் வைத்தால் தான் விமோசனம்.
ஜனாதிபதி ஆட்சி என்றால் ஆறு மாதம் பா.ஜ.க அதிகார ஆர்ப்பாட்டம் இருக்கவே செய்யும். ’தமிழகத்தில் தேர்தலுக்கான சூழ்நிலை இல்லை’ என்று சொல்லி ஆறு மாதம் கழித்தும் மீண்டும் ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கப்படாது என்பது என்ன நிச்சயம்? ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தித்தான் ஆக வேண்டும் உடனே, உடனே தேர்தல் நடத்த சட்ட சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும்.
"Confusion has made it's masterpiece now"
- Shakespeare in Macbeth (Macduff's popular dialogue)
………………………………………………..
http://rprajanayahem.blogspot.in/2017/01/cakewalk.html