அன்றைக்கு ரொம்ப சீக்கிரம் ஷூட்டிங் முடிந்து லாட்ஜிற்கு வந்தவுடன் குளித்து விட்டு கொஞ்சம் ஓய்வெடுக்கும் போது மாலை ஐந்தரை மணி. சரி ஒரு வாக்கிங் போய் விட்டு வந்து விடலாம் என்று நினைத்த போது, சக அஸிஸ்டெண்ட் டைரக்டர் சரவணன் ஓடி வந்தான். இவன் ஒருவன் தான் எனக்கு இணக்கமானவன். என்னிடம் நல்ல மரியாதை காட்டிய உதவி இயக்குனர்.
உதவி இயக்குனராக நான் பணி புரிந்த படங்களில் பெரிய துயர அனுபவம் சக உதவி இயக்குனர்கள், அசோசியேட் இயக்குனர்கள் இவர்களால் தான். ஏதோ இவனுங்க சொத்த புடுங்க வந்தவன் போல ரொம்ப அல்லாடுவான்கள். Hostility, Contempt.
இயக்குனரால் பெரிய அவமானங்கள் நேராது. ஆனால் இந்த உதவி இயக்குனர்கள் படுத்தும் பாடு சகிக்க முடியாது. சீனியர் என்ற அந்தஸ்தில் இவன்கள் செய்யும் ஜபர்தஸ்து சொல்லும் தரமன்று. இன்று இவன்கள் எல்லாம் சவடால் விட்ட அளவுக்கு வளரவுமில்லை. காணாமல் போய் விட்டான்கள்.
சரவணனை இவன்கள் லிஸ்ட்டில் சேர்க்க வேண்டியதில்லை.
சரவணனும், நானும் ஒரே அறையில் தான் இருந்தோம். இன்னொரு விளங்காதவனும் அப்போது கூட இருந்தான். எப்போதும் சிகரெட் பிடித்துக்கொண்டு, காலை ஆட்டிக்கொண்டு, ’உங்களுக்கு நான் சீனியர்’ என்ற தோரணையை காட்டிக்கொண்டே இருக்கிற ஒரு கடுவன். என் மீது இருக்கிற வெறுப்பையும், கோபத்தையும் எப்போதும் சரவணனிடம் காட்டிக்கொண்டு இருக்கிற குரங்குப்பயல். இவனுக்கும் சீனியராய் இருந்த ஆறு பேர் பற்றி சொல்லவே தேவையில்லை.
சரவணன் லாட்ஜின் மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவன் புகை வருவதை பார்த்திருக்கிறான். அதே சமயம் நானும் புகை நாற்றத்தை ரூமில் உணர்ந்தேன். சரவணன் ஓடி வந்தவன் “ என்னங்க.. புகை வாசனை வருதுங்க.” என்றான். நான் அவனோடு மொட்டை மாடிக்கு போய் எங்கள் அறையை ஒட்டிய பகுதிகளை கவனித்த போது புகை எங்கள் அறைக்கு அடுத்த வலது பக்க அறையில் இருந்து வருவதை கண்டு பிடித்தேன்.
உடன் நான் மேலிருந்து கீழே இறங்கினேன். படியில் இறங்கி கீழ் பகுதியில் புலியூர் சரோஜா அறையில் பேசிக்கொண்டிருந்த ப்ரொடக்சன் எக்ஸிக்யூட்டிவ் ஜெயக்குமாரிடம் சொன்னேன்.
அவரும் மற்றொரு ப்ரொடக்சன் எக்ஸிக்யூட்டிவ் வடுக நாதனும் தான் அந்த புகை வந்த அறையில் அப்போது இருந்தவர்கள்.
வடுகநாதன் தான் அறைக்குள் அப்போது இருக்கிறார் என்பது தெரிந்தது.
ஜெயக்குமாரை பல டெக்னிசியன்களுக்கும் நடிகர்களுக்கும் அவ்வளவாக பிடிக்காது. சம்பளம் போடுவதில் ரொம்ப கறார் காட்டுவார் என்பார்கள். ஆனால் அவர் என்னிடம் எப்போதும் ரொம்ப கனிவாகவே பேசுவார்.
உடனே முதல் மாடியில் இருந்து ஜெயக்குமாருடன் நானும் சரவணனும் எங்கள் அறையிருந்த இரண்டாவது மாடிக்கு ஓடினோம். இதற்குள் பரபரப்பாகி கூட்டம் சேர்ந்து விட்டது. கதவை நானும் சரவணனும் மோதி உடைத்தோம். உள்ளே ஒரே நெருப்பும் புகையும்.
வடுகநாதனைக் காண முடியவில்லை. புகை நடுவில் எப்படி தேடுவது? பாத்ரூமில் உள்ளே மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை சரவணன் தூக்கினான். அறையில் இருந்த சூட் கேஸை எடுத்து உடனே ஜெயக்குமாரிடம் கொடுத்தேன். ஐந்து லட்சம் பணம் அதில் இருந்திருக்கிறது.
வடுகநாதனை தூக்கி வந்து எதிரே ஒரு அறையில் கிடத்தினோம். டாக்டர் வந்தார். அவருக்கு நெருப்புக்காயம் லேசாக இருந்தது.
குடித்து விட்டு படுத்திருந்திருக்கிறார். சிகரெட் கங்கு கட்டில் மெத்தையில் பட்டு தீப்பிடித்திருந்திருக்கிறது. படுத்திருந்த வடுகநாதன் நெருப்பு சூடு தாங்க முடியாமல் எழுந்து அறை கதவை திறப்பதாக நினைத்து பாத்ரூம் கதவை திறந்து உள்ளே விழுந்து விட்டிருக்கிறார்.
இவர் முன்னர் பாரதிராஜாவுடைய படங்களில் ப்ரொடக்சன் மேனேஜராக இருந்தவர். இப்போது பஞ்சு அருணாச்சலம் தயாரிக்கும் படங்களில் தயாரிப்பு நிர்வாகி. பஞ்சு அருணாச்சலத்தின் சகோதரி மகன் தான் வடுகநாதன்.
இவரை படத்தயாரிப்புக் காலத்தில் நான் பார்த்ததேயில்லை. பெரும்பாலும் சென்னை ஆஃபிஸிலேயே இருப்பார் போலும். ஜெயக்குமாரை மட்டுமே தெரியும்.
சரியான நேரத்தில் புகையை வைத்து கண்டு பிடித்துவிட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு விட்டது. நெருப்பை அணைக்கிற வேலை நடந்தது.
வடுகநாதன் உயிர் பிழைத்தது பெரிய அதிசயம் தான் என்று எல்லோரும் பேசினார்கள். அவருக்கு நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டது.
இப்போது எங்கள் அறையில் இருந்த மற்றொரு அஸிஸ்டெண்ட் டைரக்டர் கடுவன் இரவு சாப்பாடு முடிந்தவுடன் சரவணனிடம் தத்து பித்து என்று உளறினான். “ஜெயகுமார் ஒரு க்ரிமினல். அவன் ப்ளான் தான் இந்த நெருப்பு. வடுகநாதனை கொல்லப் பார்த்திருக்கிறான். இனி அவன் இந்த ப்ளான் சக்ஸஸ் ஆகாத கடுப்பில் இதை கண்டு பிடித்த உங்க ரெண்டு பேரை பழி வாங்காமல் இருக்க மாட்டான்”.
புகைச்சல்!
..................................
நான் நடித்த காட்சி பல தடங்கல்களுக்கிடையில் ஒரு வழியாக அருணாச்சலம் ஸ்டுடியோவில் ஷூட் செய்து முடிந்த அன்று கலகலப்பாக ஜெயக்குமார் சத்தமாக எல்லோருக்கும் கேட்கும்படியாக என்னிடம்
“அப்பாடா! ராஜநாயஹம் சீன் ஒரு வழியா நல்ல படியா எடுத்து முடிச்சாசே!’ என்றார்.
……………………………..
படம் முடிந்த பின் சம்பள பாக்கிக்காக பஞ்சு அருணாச்சலம் ஆஃபிஸ் போக வேண்டியிருந்தது. நான் போன போது நிறைய டெக்னிஷியன்கள் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். அவர்களும் சம்பள பாக்கிக்காகத் தான் ரொம்ப நேரமாக அங்கு நின்று கொண்டிருந்தார்கள்.
நான் தயங்கியவாறு வெராண்டாவில் நின்றேன். ஜெயக்குமார் என்னை பார்த்து விட்டார். “ ராஜநாயஹம், உள்ளே வாங்க! வாங்க உள்ளே.” என்றார்.
நான் ஹாலிற்குள் நுழைந்தேன். ஜெயக்குமார் என்னை உடனே ஒரு அறைக்கு அழைத்துப் போனார். அங்கே வடுக நாதனை இரண்டாம் முறையாகப் பார்த்தேன். ”வடுகநாதன்! இவர் தான் ராஜநாயஹம்! ராஜநாயஹம்! அன்னக்கி மட்டும் இவர் இல்லன்னா இன்னிக்கி நீ உயிரோட இருந்திருக்க முடியாது. உன்ன காப்பாத்துன ராஜநாயஹம்!”
வடுகநாதன் என்னை பார்த்தார். ”நீங்கதானா ராஜநாயஹம்?”
உடனே என் சம்பள பாக்கியை வடுகநாதன் கொடுத்து விட்டார்.
இருவரிடமும் நன்றி சொன்னேன்.
…………………………………………………………
http://rprajanayahem.blogspot.in/2017/05/blog-post_9.html
http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_29.html
http://rprajanayahem.blogspot.in/2013/01/blog-post_6.html
http://rprajanayahem.blogspot.in/2014/10/blog-post_20.html
http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_13.html
http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_14.html
http://rprajanayahem.blogspot.in/…/loose-words-are-gold-coi…