Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1880

அரைத்த மாவு

$
0
0


சினிமாவை ப்பொறுத்தவரை சில எவர் கிரீன் சப்ஜெக்ட் உண்டு.
அண்ணன் தங்கை பாசம். சிவாஜியே இதில் பாசமலர், பச்சை விளக்கு, அன்புக்கரங்கள் , தங்கைக்காக என்று பலவாறு சலிக்காமல் நடித்தார்.
எம்.ஜி.ஆர் துவங்கி பிற கதாநாயகர்களின் பல குடும்ப படங்களில் தங்கை ட்ராக் ஒன்று  கலந்தே தான் இருக்கும்.
பாரதி ராஜா வின் ’கிழக்குச் சீமையிலே ’ தாண்டி பாக்யராஜ் கூட விஜய்காந்தை போட்டு அண்ணன் தங்கை பாசப்படம் ஒன்றை இயக்கியிருக்கிறார்.

இன்னொரு எவர் கிரீன் சப்ஜெக்ட். ’அடங்காப்பிடாரி பெண்ணை அடக்குகிற கதாநாயகன்.’ மாமியாரோ, கதாநாயகியோ ரொம்ப திமிராயிருப்பாள். இந்தப்படங்களுக்கு பெண்கள் கூட்டம் மோதி அலைபாயும். வசூல் அள்ளும்.

சிவாஜியின் அறிவாளி, எம்.ஜி.ஆரின் பெரிய இடத்துப்பெண் இந்த வகை.
 பட்டிக்காடா பட்டணமா, கல்யாணமாம் கல்யாணம், சகலகலா வல்லவன், மன்னன் என்று கதாநாயகியின் திமிர் ஒடுக்கும் படங்கள்.

மாமியார் திமிர் ஒடுக்கும் படங்களில் பணமா பாசமா, பூவா தலையா, மாப்பிள்ளை போன்ற படங்களுடன் மீண்டும் பட்டிக்காடா பட்டணமாவையும் சேர்க்க வேண்டும்.
அடங்காப் பிடாரி வில்லி பெண்களை ஒடுக்கி ஜெயித்தாலும்
( படையப்பா ) ரசிகப்பெருமக்கள் பெரும் ஆதரவு தரும் உத்தரவாதம் உண்டு.

இந்த Triangle subject ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் துவங்கி இளமை ஊஞ்சலாடுகிறது வரை. ஒரு பெண், இரு ஆண்கள்.

இதே ட்ரையாங்கிளில் ஜெமினி கணேசன் என்றால் இரு கதா நாயகிகள் !


ஸ்ரீதரின் கல்யாண பரிசு, அவளுக்கென்று ஓர் மனம்.
கே.பாலசந்தரின் தாமரை நெஞ்சம், இருகோடுகள், வெள்ளி விழா.
  

திரைப்படங்களில் ஒரே பெண்ணை இரண்டு பேர் காதலிப்பது என்பது எப்போதும் கொஞ்சம் சீரியஸான விஷயம். ஏனென்றால் அது Classic situation என்பதாக எல்லோரும் நம்புவார்கள்.  ஆனால் அதுவே மூன்று பேர் ஒரே பெண்ணுக்கு நூல் விடுவது என்றால் கேலிக்கூத்தாகி விடுகிறது !



என் இளைய மகன் அஷ்வத் எல்.கே.ஜி படிக்கும்போது அப்பாஸும் வினித்தும் தபுவை காதலிக்கிற படம் பார்க்கும்போது “கதை சரியில்ல. ஆளுக்கு ஒரு அக்காள லவ் பண்ண வேண்டியது தான ! ஏன் இப்படி ஒரே அக்காவ ரெண்டு பய லவ் பண்றாய்ங்க” என்று குழம்பிப் போய் என்னிடம் கேட்டான்.


உத்தரவின்றி உள்ளே வா (1971) ஸ்ரீதரின் சித்ராலயா தயாரிப்பில் என்.சி.சக்ரவர்த்தி இயக்கத்தில் வெளி வந்தது. வசனம் கோபு.
ஸ்ரீதரிடமிருந்து பி.மாதவன், சி.வி.ராஜேந்திரன் போன பின் என்.சி.சக்ரவர்த்தி தான் அசோசியேட் டைரக்டர். என்.சி.சக்ரவர்த்தி இயக்குனரான பின்னும் ஸ்ரீதரோடேயே தான் இருந்தவர். ஸ்ரீதர் எப்போதும் ’டே சக்கி டே சக்கி ‘ என்று சொல்லிக்கொண்டே தான் இயக்குவார்.இயங்குவார்.

படத்தில் ரவிச்சந்திரன், நாகேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி , மாலி நால்வருமே கதாநாயகி ஜானகி என்ற பெயரில் வரும் நடிகை காஞ்சனாவை சீரியஸாக காதலிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
”டேய் ஜானகியப் பத்தி என்னடா நினைக்கிறீங்க” என்ற ரவிச்சந்திரனின் கேள்விக்கு  “ ரொம்ப நினைக்கிறோம். ராத்திரி ஒரு பய தூங்கலே” என்ற  நாகேஷின் பதிலுக்கு தியேட்டரே அதிரும்.

’உத்தரவின்றி உள்ளே வா’ பாடல் காட்சியில் ரவிச்சந்திரன், நாகேஷ் வெண்ணிற ஆடை மூர்த்தி மூவருக்கும் காஞ்சனாவோடு டூயட் பாடுவதாக கனவு. மாலி அந்த பாடலிலேயே ’எனக்கு வேண்டாம்’ என்று தலையை ஆட்டி ஒதுங்கி விடுவார். 
( மாலி தன் சித்தப்பா சாயலில் இருப்பதாக காஞ்சனா சொல்லி விடுவார்!) 

காஞ்சனா மீதான நாகேஷின் மையல், தவிப்பு சொல்லி முடியாது. விரட்டி விரட்டி சைட் அடிப்பார். ஒரு வழியாக ரவிச்சந்திரன் தான் காஞ்சனாவை தட்டிக்கொண்டு போய்விடுவார். அதன் பின் நாகேஷ் பாதி மனசோடு வேறு வழியே இல்லாமல் ரமா பிரபாவோடு எரிச்சலாக செட்டிலாவார். வெண்ணிற ஆடை மூர்த்தி விரக்தியோடு சச்சுவோடு சேர்வார்.

சி.வி.ராஜேந்திரன் இயக்கிய கலாட்டா கல்யாணத்தில் ஒரு சுவையான காட்சி. சிவாஜியின் காதலி ஜெயலலிதாவைப் பார்த்தவுடன் நாகேஷ் நடிப்பு! தனக்காக சிவாஜி பார்த்திருக்கிற பெண் தான் என நினைத்து நாகேஷ் கொஞ்ச நேரம் செய்யும் சேட்டை எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது.

’இன்று போய் நாளை வா’ படம் சித்ராலயாவின் ’உத்தரவின்றி உள்ளே வா’ வெளி வந்து சரியாக பத்தாண்டுக்குப்பின் வெளி வந்தது.
அப்போது ஸ்ரீதரோ, என்.சி.சக்ரவர்த்தியோ,கோபுவோ கொந்தளித்து எங்க படம் ’உத்தரவின்றி உள்ளே வா’ படத்தின் காப்பி இந்த ’இன்று போய் நாளை வா’ என்று கோபப்பட்டு செட்டில்மென்ட் வேண்டும் என்று கேட்கவில்லை.

பின்னால் ’முந்தானை முடிச்சு’ படம் வெளி வந்த போது கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பதறி ரொம்ப கோபப்பட்டு “ என்னுடைய ’கற்பகம்’, ’சித்தி’ படங்களை முந்தானை முடிச்சில் பாக்யராஜ் காப்பியடித்து விட்டார்’’ என்று பெருங்கூப்பாடு போட்டார்.



”கண்ணா லட்டு தின்ன ஆசையா’’ பாக்யராஜின் படம் வெளி வந்து முப்பத்திரெண்டு வருடத்தில் ரிலீஸ் ஆகியிருக்கிறது.
இப்படி ’இன்று போய் நாளை வா’ வை ஈயடிச்சான் காப்பியடித்து
’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் எடுத்திருக்க வேண்டாமே!






Viewing all articles
Browse latest Browse all 1880

Latest Images

Trending Articles



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>