Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1849

’மாபசி’ ம.பொ.சி

$
0
0

1950களில் ம.பொ.சியின் தமிழரசு கழகம், அண்ணாத்துரையின் தி.மு.க இரண்டு கட்சிக்குமே தங்கள் பொது எதிரியாக அறியப்படும் காங்கிரஸை விட பரஸ்பரம் ஒரு துவேசம் இருந்திருக்கிறது.
1946ல் தமிழரசு கழகத்தை ஆரம்பித்த ம.பொ.சி 1954 வரை காங்கிரஸில் இருந்தவர் தான்.
தமிழரசு கழகம், திராவிட முன்னேற்றக்கழகம் இரண்டுமே தமிழர் நலன் சார்ந்தே இயங்கியவை.
இரண்டுமே சிறந்த மனிதர்களாக அடையாளம் கொண்டவர்களினால் சூழப்பட்டிருந்தன.
சிலம்புச்செல்வர் என்று ம.பொ.சிக்கு பேராசிரியர் ரா.பி.சேது பிள்ளை பட்டம் சூட்டினார்.
அறிஞர் என்று அண்ணாத்துரை கட்சிக்காரர்களால் கௌரவப் படுத்தப்பட்டார்கள்.
தமிழரசுக்கழகத்தில் கா.மு.ஷெரிப், கு.மா.பாலசுப்ரமணியம், கு.சா. கிருஷ்ணமூர்த்தி போன்ற திரை ஆளுமைகள் (கவிஞர்கள்) மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.
ஏ.பி. நாகராஜன் தமிழரசு கழக ஆதரவாளர்.
கவிஞர் கண்ணதாசன் தி.மு.கவில் சிக்கிக்கொண்டார்.
1951ல் முதல் தி.மு.க மாநாட்டிலேயே புரட்சி நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் மேடையேறி விட்டார்.
நாவலர் நெடுஞ்செழியன், சொல்லின் செல்வர் சம்பத், மேதை மதியழகன்.
என்.வி நடராசனுக்கு எதுவும் பட்டம் இருந்ததாகத்தெரியவில்லை.
சிந்தனைச் சிற்பி சிற்றரசு.
ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரல்லாதவராயிருந்தாலும் இன்னொருவர்- (தக்ஷ்ணாமூர்த்தி!)- கலைஞர் மு. கருணாநிதி என்று அறியப்பட்டார்.
பேருக்கு ஆசிரியராய் இருந்த Tutor -
’பேராசிரியர்’ அன்பழகன்.
குட்டிப்பெரியார் ஏ.வி.பி. ஆசைத்தம்பி.
இப்படி கலர் கதாநாயகன்களால் தி.மு.க ஜொலித்தது.
தமிழரசுக்கழகத்தில் ஜிகினாத்தலைவர்கள் யாரும் இல்லை போலும்.
முக்கிய வேற்றுமை தமிழரசு கழகம் கடவுள் நம்பிக்கை கொண்ட இயக்கம். ஒரு வகையில் ஆன்மீகம் கலந்த அரசியல்.
தி.மு.க தலைவர் அப்போதெல்லாம் ‘ஒருவனே தேவன்’ பிரகடனம் செய்திருக்கவில்லை. திருப்பதிக்கு சென்ற சிவாஜிகணேசன் கட்சியிலிருந்து
நீக்கப்பட்டு “ தம்பி! எங்கிருந்தாலும் வாழ்க!” என்று ஆசீர்வதிக்கப்பட்டார்.
மாணவர்களிடையே அன்று தி.மு.க., தமிழரசு கழகம் இரண்டின் ஈடுபாடு பாதிப்பு இருந்திருக்கிறது.
மாயவரம் முனிசிபல் ஹைஸ்கூலில் படித்துக்கொண்டிருந்த ந.முத்துசாமி தி.மு.க.
அவருடைய வகுப்புத்தோழர் கவிஞர் ஞானக்கூத்தன் தமிழரசு கழகம்.
இந்த அரசியலானது
சிறுவர்களான முத்துசாமியையும் ஞானக்கூத்தனையும் பிரித்திருக்கிறது.
இருவரும் அந்த சின்ன வயதில் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதால் நட்பு பாதிக்கப்பட்டிருக்கிறது.
முத்துசாமி அண்ணாமலை யுனிவர்சிட்டியில் இண்டர்மீடியட் படிக்கும் போது (1955- 1957) சிதம்பரத்தில் ஒரு தி.மு.க மீட்டிங்.
அண்ணாத்துரையுடன் தம்பித்தலைவர்களும் மேடையில்.
தம்பித்தலைவர்கள்!
சிதம்பரம் தி.மு.க மேடையில் பேசிய தம்பித்தலைவர்கள் அனைவரும் ம.பொ.சியை கடுமையாக விமர்சித்து திட்டி பேசியிருந்திருக்கிறார்கள்.
கடைசியில் அண்ணா எழுந்திருக்கிறார். சிவஞானத்தின் மேலான நல்ல விஷயங்கள் பற்றியெல்லாம் ஒவ்வொன்றாக பட்டியல் போட்டு விட்டு தம்பித்தலைவர்களைப்பார்த்து கேட்டிருக்கிறார்: ”இப்படிப்பட்ட நல்லவரான ம.பொ.சியை நீங்கள் தாக்குவது என்ன நியாயம்?”
உடனே அந்த மேடையிலேயே அத்தனை தம்பித்தலைவர்களும் தங்கள் அண்ணனிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள்.
’அண்ணா, மன்னித்துக்கொள்ளுங்கள்.
ம.பொ.சியின் அருமை புரியாமல் பேசி விட்டோம்.’
ந.முத்துசாமி கல்லூரி மாணவராயிருந்த போது சிதம்பரத்தில் நடந்த இந்த அரசியல் பொதுக்கூட்ட நிகழ்வு இன்றும் பசுமரத்தாணி போல அவர் மனதில் நிறைந்திருக்கிறது.
”ம.பொ.சிக்கு எல்லாவற்றையும் தானே செய்ய வேண்டும் என்ற ’மாபசி’!”
– இப்படித்தான் அன்று கிண்டலாக குறிப்பிடும் வழக்கம்.
மதராஸ் மனதே என தெலுங்கர்கள் சொன்ன போது அதை எதிர்த்து சென்னை தமிழகத்துக்கு கிடைக்க போராடினார்.
திருவேங்கடத்தை தமிழகத்துடன் இணைக்கப் போராடினார், அதில் வெற்றி கிடைக்கவில்லை.
ஆனால் அப்போராட்டத்தால் தான் திருத்தணி தமிழகத்துக்கு கிடைத்தது.
குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர் மேடு, தேவிக்குளம் போன்றவை
தமிழகத்துக்கு கிடைக்க போராடினார்.
குமரியும்
செங்கோட்டை( நெல்லை)யும்
தமிழகத்துக்கு கிடைத்த போதும் பீர் மேடு, தேவிக்குளம் கேரளாவுடன் இணைக்கப்பட்டன.
1967ல் காங்கிரசை தமிழகத்தில் எதிர்ப்பதில் தி.மு.கவுடன் ராஜாஜியின் சுதந்திரா கட்சி கூட்டு சேர்ந்த போது ம.பொ.சியின் தமிழரசு கழகமும் இணைந்து நின்றது.
ஞானக்கூத்தன் பெயர்க்காரணம் சிவஞானத்தை கண்டு கூத்தாடியவராகையால் ’ஞானக்கூத்தன்’ என்று பிரமிள் சொன்னதுண்டு.
ஞானக்கூத்தனின் உவமான வரி ஒன்று. ’வலம்புரி சங்கு வாய்க்கால் சங்காக சிறுத்தது’. இப்படி ம.பொ.சி எனும் வலம்புரி சங்கு வாய்க்கால் சங்காக சிறுத்துப்போன காலமும் உண்டு.
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதியின் ரசிகராக மாறினார்.
எம்.ஜி.ஆர் ஆட்சியில் எம்.ஜி.ஆர் அபிமானியாகி ம.பொ.சி தமிழக மேல் சபை தலைவராக இருந்தார்.
ஆளுங்கட்சிகளையே சார்ந்து இயங்கும் எந்த அரசியல் தலைவருக்கும் கொஞ்சம் மதிப்பு குறையும்.
மழுங்கிய ஒரு தன்மையும் மங்கலான பிம்பமும் ஏற்படும். அதற்கு ம.பொ.சியும் விலக்கல்ல.
கருணாநிதி - எம்.ஜி.ஆர் இருமை எதிர்வு அரசியலில் அன்று பிற தலைவர்களுக்கு இருவரில் ஒருவரை ஆதரிக்கும் போது மற்றவருக்கு எதிரி என்பது எழுதப்பட்ட விதி.
ம.பொ.சி. கருணாநிதி ஆட்சி காலத்தில் அவருக்கு ஆதரவாகவும்
எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் இவருக்கு ஆதரவாகவும் இருந்தார்.
இருவரின் ஆட்சிக்காலத்திலும் அரசாங்க நண்பராக இருந்தார்.
1970களில் ம.பொ.சிக்கு துக்ளக் பத்திரிக்கை கார்ட்டூன்களில் டவுசர் தான் மாட்டி விட்டிருப்பார். சின்னப்பையனாகத் தான் மீசை தொங்க துக்ளக் கார்ட்டூன்களில் தோற்றப்படுத்தப்பட்டிருந்தார்.
ம.பொ.சி அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு பெரிய ஜால்ராவாக இருந்ததால் இந்த நிலை. கருணாநிதிக்குப் பக்கத்தில் டவுசர் போட்டு கைகளை ஆட்டிக்கொண்டு, அவரை பரவசமாக அண்ணாந்து பார்த்துக்கொண்டு சந்தோஷமாக ஆடும் சிறுவனாக ம.பொ.சி நிற்பார்.சட்டையில்லாமல் வெறும் உடம்போடு டவுசர் போட்ட சிறுவனாய் சிலம்புச் செல்வர்.
எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்திலும் இவருக்கு டவுசர் தான்.
இது பற்றி ஒருவர் சோவிடம் கேட்ட கேள்வி “என்ன இப்படி செய்கிறீர்கள். ம.பொ.சி எவ்வளவு பெரியவர். அவருக்கு இப்படி டவுசர் மாட்டி சின்னப் பையனாக கார்ட்டூனில் சித்தரிப்பது நியாயந்தானா?”
சோ பதில்“ அவருக்கு வேட்டி கட்டி ப்ரமோஷன் கொடுக்க நானுந்தான் தவிக்கிறேன். ஆனால் அவரது அரசியல் நடவடிக்கைகள் டவுசர் மாட்டி கார்ட்டூன் போடுமளவுக்குத்தான் இருக்கிறது. நான் என்ன செய்யட்டும்? சொல்லுங்கள்.”
……………

Viewing all articles
Browse latest Browse all 1849

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>