கநாசு தவிர அவருடைய சமகாலத்தவர்களான மணிகொடி எழுத்தாளர்களுக்கு சினிமா நாட்டம் இருந்தது.
கநாசு வுக்கு சில கோட்பாடுகள்இருந்தன. கலையென்றால் ஒரு தேவதையை தான் ஆராதனை பண்ணனும். நான் எழுத்தையும் ஆராதனை பண்ணுவேன். இன்னொரு கலையையும் ஆராதனை பண்ணுவேன் என்று சொல்லக்கூடாது என்று நினைப்பவர் க நா சு.
Jealous Mistress.
ஒரு கலை இன்னொரு கலைக்கு சக்களத்தி.
அவருடைய நாவல்கள் சர்மாவின் உயில், பொய்த் தேவு, ஒரு நாள், வாழ்ந்தவர்கள் கெட்டால், அசுர கணம் எல்லாம் மகத்தான படைப்புகள்.
தி. ஜானகிராமனுக்கு முன்பு பிரதியின்பம் என்பதை க. நா. சு தான் காட்டியவர்.
அவருடைய உரைநடை விஷேச தரமானதாக இருக்கிறதை இப்போது படித்தாலும்
உணர முடியும்.
தற்போதைய எழுத்தாளர் ஒருவரின் நாவலை படித்த போது போதும் போதும் என்று ஆகி விட்டது.
உடனே க. நா. சு நாவல்களை மறு வாசிப்பு செய்தேன். அப்போது தான் செரிமான பிரச்சினை சரியாகியது.
க.நா.சுவின் விமர்சன நூல் 'கலை நுட்பங்கள்'அவருடைய புகைப்படத்துடன் வெளி வந்தது.
அதை பார்க்க க. நா.சு உயிருடன் இல்லை.
அந்த நூலை மகாதேவனுக்கு
சமர்ப்பணம் செய்திருந்தார்.
மகாதேவன் இன்றைய உயர் நீதிமன்ற நீதியரசர்.
க.நா.சுவுக்கு மா. அரங்கநாதனின் மகன் மகாதேவன் மீது மிகுந்த அன்பும் வாஞ்சையும் இருந்திருக்கிறது.
க. நா.சு மட்டுமல்ல. முன்றில் அலுவலகத்திற்கு வரும் எல்லா எழுத்தாளர்களும் மகாதேவனிடம் தான் அதிகமாக பேசுவார்கள் என்று அவருடைய அப்பா மா. அரங்கநாதன் எழுதியிருக்கிறார்.
பிரமிளின் ஆத்மார்த்தமான நண்பராக மகாதேவன் இருந்தார் என்பது அறிந்த விஷயம். போஷகராக அவரை பேணியவர்.
பிரமிள் இவரிடம் மட்டும் தான்
சண்டை போட்டதில்லை.
கநாசு எதையும் தொழ மறுத்தவர்.
புனிதம் என புல்லரிப்பு எதுவும்
அவருக்கு கிடையாது.
நடராஜர் சிலை பற்றி அவர் சொன்ன
ஒரு கமெண்ட்.
'ஒற்றை காலை அவர் தூக்கி நிற்பதற்கு
கொசு கடி கூட காரணமாயிருக்கலாம் .'
நான் இங்கே குறிப்பிட வந்த இன்னொரு விஷயம்
சுந்தர ராமசாமி 'கநாசு நினைவோடை '
நூலில் செய்துள்ள தகவல் பிழை பற்றி.
கநாசு வின் தகப்பனார் தஞ்சை மாவட்டத்தில்
ஒரு சாதாரண சப் போஸ்ட் மாஸ்டர் தான்.
ஆனால் சுராவின் முதுமை மறதி காரணமாக
'கநாசு'வின் தகப்பனார் தென் ஆப்பிரிக்காவிலே 'போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் 'பதவி வகித்தவர் என்று ரொம்ப விசித்திரமாக, படு அபத்தமாக குறிப்பிட்டுள்ளார்.
தபால் துறை யில் போஸ்ட் மாஸ்டர்
என்பது பொதுவான வார்த்தை.
பிரான்ச் போஸ்ட் மாஸ்டர், சப் போஸ்ட் மாஸ்டர், ஹெட் போஸ்ட் மாஸ்டர் என்று பல பிரிவு தபால் துறையின் உள்வட்டத்தில் உண்டு.
ஒரு மாவட்டத்துக்கு அந்த காலத்தில்
ஒரு ஹெட் போஸ்ட் மாஸ்டர் தான்.
பிரான்ச் போஸ்ட் மாஸ்டர் Extra department எனப்படும் கீழ்நிலை ஊழியர்.
அதாவது தபால்துறையின் உள் ஊழியர்களான Postman , Class 4 இவர்களுக்கும் கீழ்.
ஜனங்கள் எல்லோரையுமே போஸ்ட் மாஸ்டர்
என்று தான் நினைப்பார்கள்.
'போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் 'என்பது தபால் துறை யில் மாநிலத்திலேயே உயர் அதிகாரி.
நான் இந்த நினைவோடையை படித்தவுடன்
சுந்தர ராமசாமிக்கே தொலைபேசியில் தெரிவித்தேன். அதிர்ந்து விட்டார்.
அவருக்கு தான் எழுதியுள்ளபடி தான் ஞாபகமாம்.
காலச்சுவடு கண்ணனுக்கும் சுட்டி காட்டினேன். அதோடு திருப்பூர் காமாட்சி கல்யாண மண்டபத்தில் 2005ல் நடந்த காலச்சுவடு நிகழ்வில் கனிமொழி கருணாநிதி
கவிதை வாசிக்க வந்திருந்தார்.
அந்த இலக்கிய கூட்டத்தில் நான் தான்
அதிக நேரம் பேசினேன்.
அந்த கூட்டத்தில் பகீரங்கமாக 'இந்த தவறை அடுத்த பதிப்பில் திருத்த வேண்டும்'என நான் பேசினேன்.