1987
பழனியில் ரைஸ் ப்ரான் ஆயில் ஏஜென்சி எடுத்திருந்த நிலையில்
தவிட்டெண்ணைக்காரர் என்று தான் எனக்குப் பெயர். ஓட்டல்கள், பஜார் கடைகள், லாலா மிட்டாய் கடைகள் எல்லாவற்றிற்கும்
ராஜநாயஹம் 'தவிட்டெண்ணெய்க்காரர்'.
பழனி மலை மேல் தேவஸ்தானம் கேண்ட்டீனுக்கு கூட எண்ணெய் கொடுத்திருக்கிறேன்.
நான் குடியிருந்த தெருவில் என் வீடு தான்
பெரிய வீடு. அதனால் தெருவில்
ராஜநாயஹம் 'பெரிய வீட்டுக்காரர்'.
What a piece of work is a Man!
- Hamlet
பழனி வள்ளுவர் தியேட்டருக்கு போய்
நான் விற்பனை செய்கிற ரைஸ் ஆயில்
அங்கே கேண்ட்டீனுக்கு சப்ளை செய்ய முடியுமா என்பதற்காக முதலாளியை சந்தித்தேன்.
பாப்கார்னுக்கு நான் கொடுத்த சாம்ப்பிளை உபயோகப் படுத்தி பாப்கார்ன் பொரித்து எடுக்கச்
சொன்னார்.
"இது என்ன எண்ணை? புதுசா இருக்கு? "
"அரிசித்தவிட்டிலிருந்து தயாரித்த ரீபைண்ட் ஆயில்.
ரைஸ் ப்ரான் ஆயிலை ரீஃபைன் பண்ணி தயாரான எண்ணெய்ங்க "
"தவிட்டெண்ணெய்யா? என்ன அநியாயம்? தவிட்டெண்ணெய சாப்பிடுற பலகாரங்களுக்கு ஒபயோகிக்கிறதா?"
அதற்குள் பாப்கார்ன் மிஷினில் பொரிந்து விட்ட பாப்கார்ன் அவரிடம் கொடுக்கப்பட்டது.
அதை வாயில் எடுத்துப் போட்டு விட்டு
என்னிடம் வள்ளுவர் தியேட்டர் முதலாளி நடராஜன் கேட்டார்.
"நிலக்கடலைய சாப்பிடுவீங்க. எவ்வளவு ருசியாருக்கு. அதில இருந்து கடலை எண்ணெய்.
தேங்காய் சாப்பிடுறோம். அதிலருந்து தேங்காய் எண்ணெய். எள்ளு பலகாரங்கள்ள சேக்குறோம். நல்லெண்ணெய்.
தவிட்ட நான் ஒங்களுக்கு குடுத்தா சாப்பிடுவீங்களா? புரியுதா? தவிட்ட மாடு தான் சாப்பிடும். தவிட்ல எண்ணெய்னு விக்க வர்றீங்களே. "
2020
இந்த தியேட்டர் முதலாளி நடராஜன் தான் இப்ப பழனியில துப்பாக்கியால ரெண்டு பேர சுட்டவர். அதில் ஒருவர் இறந்திருக்கிறார்.
பழனிக்காரரான கவிஞர் தேவேந்திர பூபதி சார் இன்று செல்பேசியில் பேசிய போது இதை நினைவு கூர்ந்து சொன்னேன்.
தேவேந்திர பூபதி : "துக்கத்தைக் கூட வலியின்றி கடத்தல். தொடர்ந்து வாசித்து வருகிறேன்..
அனுபவத்தை மீறின அறிவில்லை..
பகிருங்கள். அறிந்து கொள்கிறோம்,
R. P. ராஜநாயஹம் சார்.
Data bank R. P. sir."
...