ராஜ் கபூர், நர்கீஸ் நடித்த படம் Chori Chori.
1953ல் இந்த இந்திப் படத்தில் சி.எல்.ஆனந்தன் ஒரு பாடலில் க்ரூப் டான்சர். மீனவர்களில் ஒருவராக ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்.
இந்த பாடல் 'உஸ்ஸுபாரு சாஜன், இஸ்ஸு பாரு தாரே' . மலையாள நடிகை கே.வி. சாந்தி ஆடிபபாடும் காட்சி.
ஆனந்தன் துடுப்பு போட்டுக்கொண்டு எழுந்து நின்று கை நீட்டும் செம்படவர்.
அடுத்த வருடம் தங்கமலை ரகசியத்தில் ஆனந்தன் 'வீராதி வீரன், சூராதி சூரன்'பாடல் காட்சியில் ஆடிப்பாடி நடித்தார்.
கே.வி. சாந்தி தமிழ் படங்களிலும் நடித்தவர்.
ஜெமினி கணேசன் நடித்த 'பெண் குலத்தின் பொன் விளக்கு''ஆடிப்பெருக்கு'
சிவாஜியின் 'மருத நாட்டு வீரன்'போன்ற படங்களில் இந்த சாந்தி உண்டு.
கே.வி.சாந்தி திருவனந்தபுரத்தில் மெர்ரிலேண்ட் ஸ்டுடியோவில் நடிகை.
மெர்ரிலேண்ட் ஸ்டுடியோ அதிபர் சுப்பிரமணியம் அறுபதுக்கும் மேற்பட்ட மலையாளப் படங்கள் தயாரித்தவர். அவற்றில் ஐம்பதுக்கும் அதிகமான படங்களின் இயக்குநர்.
ஜெமினி கணேசன், பத்மினி நடித்த 'குமார சம்பவம்'முக்கியமான மலையாளப் படங்களில் ஒன்று.
எனக்கு இந்த மெர்ரிலேண்ட், அந்த சுப்ரமண்யம், மலையாள நடிகை கே.வி. சாந்தி பற்றி Associate memory.
மதுரையில் எங்கள் மொசைக் கம்பெனி. இதில் அப்பா, பெரியப்பா, அத்தை பங்கு தாரர்கள்.
என்னுடைய பெரியப்பா மகன் பால்ராஜ் (திருச்சி கிரிமினல் லாயர்),
அத்தை மகன்கள் சீனிக்குமார் ( ஹைவேஸ் அடிசனல் டிவிசனல் இஜ்சினியர்) செல்லத்துரை ( வி.ஏ.ஓ)
இவர்கள் வேலைக்கு போகும் முன் எங்கள் ஸ்டாண்டர்ட் மொசைக் கம்பெனியை கவனித்து கொண்டார்கள்.
பின்னாளில் ஸ்ரீ கோமதி அம்பிகை ட்ரான்ஸ்போர்ட் அதிபராக சென்னை, தூத்துக்குடி, சங்கரன் கோவிலில் கொடி கட்டிய எங்கள் நெருங்கிய உறவினர் சங்கரன் கோவில்
மணி கூட இந்த மொசைக் கம்பெனியில் நிர்வாகியாக வேலை பார்த்திருக்கிறார்.
பழனி தேவஸ்தானம், பண்ணைக்காடு அரசு மருத்துவமனை, திருவனந்தபுரம் மெர்ரிலேண்ட் ஸ்டுடியோவில் மொசைக் டைல்ஸ் நாங்கள் போட்டதுண்டு.
மெர்ரிலேண்ட் ஸ்டுடியோ எக்ஸ்டென்ஸன் பில்டிங்கில் மொசைக் வேலையை கவனித்துக் கொண்டிருந்த செல்லத்துரை அத்தான் மெர்ரிலேண்ட் சுப்பிரமணியம், இந்த நடிகை கே.வி. சாந்தியையெல்லாம் அப்போது சந்தித்ததைப் பற்றி அப்போது அடிக்கடி சொல்வார்.
இப்போது 2020ல் தான் கே.வி. சாந்தி இறந்தார்.