ஒரு பணக்கார உறவினர். நகைக்கடை அதிபர். எப்போதும் சினிமா பற்றி ரொம்ப ஆர்வமாக இருப்பார். சினிமா பிரபலங்கள் ஊர்ப்பக்கம் வந்தால் தேடிப்போய் பார்ப்பார். அவர்களை தன் கடைக்கு கூட்டிக்கொண்டு வருவார். புகைப்படம் எடுத்துக்கொள்வார். அவர்களிடம் சினிமாப்படம் எடுக்க ஆர்வமாயிருப்பது போல பேசுவார். இதனால் அவரைத் தேடி சினிமா எடுக்க ஆசைப்படும் பிரபலமில்லாத ”சினிமா ’சின்ன’ மனிதர்கள்” பலர் வந்து விடுவார்கள்.
அவரைத் தேடி இப்படி ஒரு ஆள் வந்திருந்தார்.
ஆளவந்தார் அவரிடம் ஆர்வமாக விவரம் கேட்கும்போது நானும் அங்கே இருந்தேன்.
வந்திருந்த ஆள் தன் பெயர் முகவை மகிழன் என்று சொன்னார். சாம்பல் நிற சஃபாரி ஷூட்டில் இருந்தார்.
அவரை நான் திரைத்துறையில் இருந்த முன்னொரு காலத்தில் ஒரு தேங்காமூடி பூஜைப்படங்களின் கதாநாயகன் அறையில் அவரை சந்தித்திருக்கிறேன்.
இதை ஞாபகப்படுத்திய போது அவர் அதை ரசிக்கவில்லை.
இங்கே இப்போது ‘சில்க் ஸ்மிதாவை தானே தான் அறிமுகப்படுத்தியதாக’ ஒரு குண்டைத்தூக்கிப் போட்டார்.
என் உறவினர் ஆளவந்தார் நாக்கைத் துளாவிய படி கண்ணை விரித்து வாய் பிளந்தார் “அப்படியா! பெரிய ஆளாயிருப்பீங்க போலிருக்கே!”
சில்க் ஸ்மிதா அப்போது இறந்திருக்கவில்லை. அதற்கு இரண்டு வருடங்களுக்குப்பின் தான் அவருடைய துர்மரணம் நிகழவிருந்தது.
முகவை மகிழனின் வருத்தம் – “ வேறு யார் யாரோ எல்லாம் சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தியதாக சொல்லப்படுவதெல்லாம் சுத்தப்பொய்!”
ஒரு பிரமாதமான சினிமா பூஜை அழைப்பிதழ் ஒன்றை எடுத்துக் காட்டினார். அது ரொம்ப பெரிதாக இருந்தது.
முந்தைய வருடம் தடபுடலாக நடத்தப்பட்ட பூஜையாம். கமலுடைய அண்ணா சாரு ஹாசன் பெயரெல்லாம் கூட போடப்பட்டிருந்த அழைப்பிதழ்.
சாரு ஹாசன் உள்பட பல சினிமா பிரபலங்களுடன் தான் எடுத்துக்கொண்டிருக்கிற புகைப்படங்களைக் காட்டினார்.
இந்தப்படம் ’மௌன சாம்ராஜ்ஜியம்’ மட்டும் வெளி வந்து விட்டால் முகவை மகிழன் தமிழகத்தின் சினிமா முக்கிய பிரமுகர்கள் பட்டியலில் இடம் பெறப்போவது உறுதி. ஆனால் உடனடி ஃபைனான்ஸ் தேவை.
’சில்க்கிடம் நீங்கள் கேட்டுப்பார்க்கலாமே?’
”சில்க் ஏறிய ஏணியை எட்டி உதைத்து விட்ட நன்றி கெட்ட நடிகை. அவரைப் பற்றி என்னிடம் தயவு செய்து பேசாதீர்கள். நான் புண் பட்டுப் போய் இருக்கிறேன்.’’
”சாருஹாசன் என் நண்பர் தான். அவரால் ஃபைனான்ஸ் ஏற்பாடு செய்ய முடியவில்லை.”
”இந்தப் படம் நிச்சயம் வெளி வர வேண்டும். உங்களால் தான் இது நடக்க வேண்டும்.”
என் பணக்கார உறவினர் இந்த மாதிரி விஷயங்களில் உற்சாகம் காட்டுவாரே தவிர பணத்தை காட்டவே மாட்டார்.
பிடி கொடுக்காமல் பாதி படமாவது முடிந்தால் தான் தன்னால் ஃபைனான்ஸ் பற்றி யோசிக்க முடியும் என்று அறுதியிட்டு உறுதியாக மொழிந்தார்.
பூஜை மட்டுமே தான் மௌன சாம்ராஜ்ஜியத்துக்கு முகவை மகிழன் நடத்தியிருந்தார். மௌன சாம்ராஜ்ஜியத்தின் பாதி சாம்ராஜ்ஜியத்தை முடிக்க அவரால் முடியும்??
உடைந்த குரலில் முகவை மகிழன் தேம்பினார்: “ இந்தப் படம் நிச்சயம் வரும். வராமல் போகாது. படத்தை முடித்து ரிலீஸ் செய்யாமல் சாக மாட்டேன். இன்னொன்று. படம் ரிலீஸ் ஆகி ’ஹிட்’ ஆகி ஓடும்போது நான் உயிரோடு இருக்க மாட்டேன். செத்துப்போய் விடுவேன். அதன் பிறகு உயிரோடு இருக்க எந்தத் தேவையும் இல்லை. சாதித்த பின் நான் செத்து விட வேண்டும்”
தான் காட்டிய புகைப்படங்களையும்,
’மௌன சாம்ராஜ்ஜியம்’ அழைப்பிதழையும்
தன் சின்ன சூட்கேசில் மீண்டும் வைத்துப் பூட்டி விட்டு
கடையை விட்டு
இறங்கி
பஜாரில்
பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
...................................
http://rprajanayahem.blogspot.in/2016/01/1980.html