1988ம் வருடம் நான் பழனியில் இருக்கும்போது ரொம்ப அழகான வித்தியாசமான இன்லெண்ட் லெட்டர்களில் என் பெயர் விலாசம் அச்சிட்டு அவற்றில் தான் கடிதங்கள் எழுதுவேன்.
அசோகமித்திரன் அது குறித்துகேட்டு எழுதியிருந்தார் - ” நீங்கள் பயன்படுத்துவது போன்ற லெட்டர்ஹெட் எங்கு கிடைக்கின்றது?”
நான் உடனே கோவை ராஜவீதியில் ஒரு கடையில் அந்த இன்லண்ட் லெட்டர்கள் வாங்கி உடனே அசோகமித்திரனுக்கு அனுப்பி வைத்தேன். அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.
.............................
எடமலைப்பட்டி புதூர் ஸ்டேட் பாங்க் காலனி வீட்டில் இருந்து மாறி 1990ல் அக்டோபரில் அருகிலிருந்த பாப்பா காலனியில் ஒரு வீட்டில் குடியேறியிருந்தேன்.அப்போது எனக்கு ரீடர்ஸ் டைஜஸ்ட்டிலுருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. இந்த கடிதத்தின் சாரம் - “ ஒரு மூன்று ஆங்கில புத்தகங்கள். எங்கள் சந்தாதாரர் அசோகமித்திரன் அவர்களிடம் ரீடர்ஸ் டைஜஸ்ட் ஒரு கேள்வி கேட்டிருந்தோம்.’ இந்த புத்தகங்கள் வாசிக்கத் தகுதியான உங்கள் நெருங்கிய நண்பர் ஒருவரை நீங்கள் எங்களுக்கு சுட்டிக்காட்டுங்கள்.’ அவர் ‘R.P. ராஜநாயஹம்’ என்று உங்களை அடையாளமிட்டிருக்கிறார்”
அசோகமித்திரன் பிறந்த வருடம் 1931. என் அப்பாவும் அதே வருடம் பிறந்தவர்.
................................................