எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் முதல் பகுதி.
மதுவிலக்கு அமுலில் இருந்தது.
பெருங்குடி மக்கள் அப்போதெல்லாம் கள்ளச் சாராயத்தையே நம்பியிருந்தார்கள். ஏழைகள் (கலக்கு முட்டி)வார்னீஷ் குடித்தார்கள்.
மதுவிலக்கு அமலில் இருந்த காலத்தில் திரைப்பட இயக்குனர் டி.என். பாலு குடிபோதையில் கைது செய்யப்பட்டிருந்தார். மீண்டும் வாழ்வேன், ஓடி விளையாடு தாத்தா, சட்டம் என் கையில் போன்ற படங்களின் இயக்குனர். தி.மு.க காரர். குடித்து விட்டு தூங்கிக்கொண்டிருந்தவரை எழுப்பி சிறை வைத்தார்கள்.
.............
சர்பு தன் நண்பர்களுடன் கள்ளச்சாராயம் கிடைத்தால் குடித்து மகிழ்வதுண்டு.
வடுகபட்டி பாண்டி தான் சாராய பாட்டில்கள் வாங்கி வந்து தருவான்.
அதற்கு அவனுக்கு கூலி, இரவு உணவுக்கு பணம் கொடுக்கிற வழக்கம்.
அந்த நேரத்தில் விலையும் கடுமை தான். அதோடு வாங்கி வருகிற பாண்டி எப்போதும் விலை ஏறி விட்டது என்று சொல்லி ஒரு எக்ஸ்ட்ரா தொகை கறந்து விடுவான்.
இப்படி ஒரு முறை பஜாரில் போய்க்கொண்டிருந்த வடுகபட்டி பாண்டியை கூப்பிட்டு டீல் செய்த போது
பாண்டி “ அண்ணே வேண்டாண்ணே. விலை இப்ப ரொம்ப ஏத்திட்டானுங்க. போலீஸ் தொந்தரவு வேற. என்ன விட்டுடுங்க..சிக்குனா எத்தனை மாசம் உள்ள இருக்கணும் தெரியுமில்ல”
அவனை சமாதானப்படுத்தி மிகப் பெருந்தொகை கொடுத்து(கூலியும் மிக அதிகமாய் கேட்டான்.) அனுப்ப வேண்டியிருந்தது. கூட ரெண்டு பாட்டில். மொத்தம் நாலு பாட்டில். குடிப்பதற்கு அப்படி தவிக்க வேண்டியிருந்திருக்கிறது. At any cost சாராயம் வேண்டும்.
போன பாண்டி வரவில்லை. பஜாரில் கடை சாத்தியவுடன் கச்சேரி. அவனக் காணோம். விசாரிக்க ரெண்டு ஆளை அனுப்பிய பின் வடுகபட்டி பாண்டி வேர்த்து, விறுத்து சைக்கிளில் வந்தான். சரக்கு எதுவும் சைக்கிளில் இல்லை.
சோகமாக பாண்டி பகர்ந்தான்.“போலீஸ் ரெய்டு. பாலத்திலிருந்து நாலு பாட்டிலையும் வாய்க்கால்ல வீசிட்டேன்.”
ஃப்ராடு. பொய் சொல்றான். நாலு பாட்டில் பெருந்தொகையை அடித்து விட்டு போலீஸ் ரெய்டு என்று அளக்கிறான்.
அவனை உடனே விட்டு விடவில்லை. குடிப்பதற்காக ஏற்பாடு செய்திருந்த அறைக்கு குடி மக்கள் பாண்டியை அழைத்துக்கொண்டு வந்தார்கள்.
”நான் தான் சொல்றனுல்லங்க.. ரெய்டு.. சிக்கக்கூடாதுன்னு பாலத்தில இருந்து வீசிட்டேன். சிக்கியிருந்தா இன்னேரம் உள்ள இருப்பேன்.”
சர்புவின் குடிகார நண்பர் ஒருவர் அவனை அடிக்காமல், அவன் சட்டை பட்டன ஒவ்வொன்னா கழட்டி, கவனமா மிரட்டி, (கவனமில்லாம மிரட்டினா பாண்டி எகிறிடுவான்.)
கொஞ்ச நேரத்தில உண்மைய ஒத்துக்கிட்டான்.
’ரெய்டுல்லாம் ஒன்னும் இல்ல. ஆனா நான் தான் பொய் சொன்னேன். வீட்டுல அரிசி இல்ல.’
”அரிசி இல்லன்னா இவ்வளவு பெரிய தொகைய ஆட்டய போடலாமாடா?”
……………………….
’பாண்டி கல்லுளி மங்கனாச்சே. எப்படியா அவன் கிட்ட இருந்து உண்மைய கறந்தீங்க.’
இது மாதிரி சூழலில் சர்புவின் ஸ்டைலை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது. இந்த interrogation பற்றிய சர்புவின் விவரிப்பு.
சர்பு பெருந்தோரணையுடன் “ The seriousity of the situation was so dangerable.சிவளை தான் அவன விசாரிச்சான்.
சிவளை : What are you?
பாண்டி : எங்கப்பா பேரு கண்ணுசாமிங்க. என் ஊரு வடுக பட்டிங்க.
சிவளை : Where are you?
பாண்டி : எடுபிடி வேலை எதுனாலும் செய்வேங்க. வீட்டுக்கு வெள்ள அடிப்பேன். காட்டு வேல எதுனாலும் கிடைச்சா செய்வேன்.
சிவளை: Why are you??
பாண்டி: எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலீங்க. பொண்ணு கிடைக்கலீங்க.
சிவளை : Who are you?
பாண்டி: தாமரைக்குளத்தில தாங்க சாராயம் வாங்கினேன்.
சிவளை: When are you?
பாண்டி : சத்தியமா நான் நல்லவன் தாங்க. காச்சிற இடத்தில கொஞ்சமா குடிச்சேங்க.
சிவளை: ’Which’ are you?????
பாண்டி : தெரியாம பண்ணிட்டேங்க. மன்னிச்சிக்கங்கங்க..
பாண்டி கால்ல விழுந்துட்டான்.
ரெண்டு விரல அவன் கடவாய்க்குள்ள சிவள விட்டான். பய உண்மைய கக்கிட்டான்.
……………………………
http://rprajanayahem.blogspot.in/2017/05/blog-post_26.html
http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post.html