க்ரியா ராமகிருஷ்ணனின் தாயார்
நான்கு வருடங்களுக்கு முன்பு தான் மறைந்தார்.
இறக்கும் போது அவருக்கு நூறு வயது.
நிறை வாழ்வு வாழ்ந்த தாயின் மகன்
நீடித்திருக்க வேண்டிய தன் பல வயதைத் தொலைத்து விட்டு அவசரமாக கிளம்பியிருக்கிறார்.
1989ம் ஆண்டில் அவருடைய க்ரியாவில்
நான் பங்குதாரராக என்னை இணைத்துக் கொள்வாரா? என்று அவருக்கு நெருக்கமான ஒருவரிடம் ஆர்வமாக விசாரித்திருக்கிறேன். பெருந்தொகையைத் தூக்கித் தர தயாராக இருந்தேன்.
ஒத்துக்கொள்ளவே மாட்டார் என்றே பட்டென்று பதில் வந்தது.
இப்படிக்கூட எனக்கு ஆசை விசித்திரமாக.
எட்டாக் கனவாக
இப்படியெல்லாம் கொஞ்ச நஞ்சமா
அன்றைய கோமாளி தவிப்பு.
ஏன் இதை சொல்ல வேண்டியிருக்கிறது?
க்ரியா என்ற அந்த பதிப்பு நிறுவனத்தின் மீது இருந்த கவர்ச்சி, க்ரியா வசீகரம்.
புத்தகம் இப்படியும் நேர்த்தியான உயர்ந்த வடிவமைப்பு கொண்டிருக்க முடியுமா..!
அந்த இளமையில் வாசிப்பு என்பதற்கு கனமான நூல்களை அழகான வடிவில் தந்த போது
க்ரியா ராமகிருஷ்ணன் மீது ஈர்ப்பு.
இங்கே அந்த பட்டியல் எழுதி விடக் கூடாது என்று வைராக்கியமாக தவிர்க்க நினைக்கிறேன்.
கேட்லாக் வேலை கூடாது.
"The BBI combinatory Dictionary of English
A guide to word combinations "நூலெல்லாம் க்ரியா ராமகிருஷ்ணன் இல்லாமல் கிடைத்திருக்குமா?
எந்த ஊரில் இருந்தாலும், எந்த வேலையாக சென்னை வந்தாலும் ராயப்பேட்டை க்ரியா
போக ஒரு தவிப்பு. எப்படியாவது போய் புத்தகங்களை அள்ளிக் கொண்டு தான்
ஊர் திரும்புகிற காலம் இருந்திருக்கிறது.
அப்படி முடியாது ஊர் திரும்ப நேர்ந்த போது
அது பெரிய இழப்பு போல
அன்று தோண்றியிருக்கிறது.
கடந்த ஐந்தாண்டுகளில் அவரோடு பழக வாய்ப்பு இருந்தது.
க்ரியா பதிப்பித்திருந்த பல நூல்களை
இந்த ஐந்தாண்டுகளிலே ஆர்டர் செய்து வாங்கியிருக்கிறேன்.
பதிப்பாளராக அவருடைய சாதனைக்கு இந்திய அரசாங்கம் உயர்ந்த பத்ம விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று இரண்டு வருடங்களுக்கு முன் பதிவில் எழுதியிருக்கிறேன்.
கடந்த முப்பது ஆண்டுகளில் என்னைப் பார்த்து பலரும் சொல்லி, கேட்டு கேட்டு சலித்த ஒரு வார்த்தை.
முத்துசாமி இறந்த வீட்டிற்கு வந்திருந்த போது க்ரியா ராமகிருஷ்ணன் மற்றவர்களிடம் 'ராஜநாயஹத்திற்கு ஏன் வயதாவதில்லை'என்றார்.
மயானத்தில் வந்திருந்த பல பெரியவர்களிடம் பன்சி உள்பட, என்னை வலிந்து அறிமுகம் செய்தார்.
மூன்று வருடங்களுக்கு முன் ஒரு முறை அவரிடம் சொன்னேன் 'என்னுடைய புத்தகங்கள் க்ரியா பதிப்பாக வர வாய்ப்பு இல்லை'
உடனே 'ஏன் வராது? ஏன் அப்படி நினைக்கிறீர்கள்? மெயிலில் அனுப்பி வையுங்கள்.'
என்றார்.
நான் அனுப்பவில்லை.
க்ரியா ராமகிருஷ்ணன் பல மாதிரி மாற்றி மாற்றி எழுதச் செய்வார். என் இயல்புக்கு ஒத்து வராது.
சென்ற ஜனவரி மாதம் புக் ஃபேரில் என்னிடம்
'உங்க சினிமா எனும் பூதம் ஒரு காப்பி
வாங்க வேண்டும்'என்ற போது மையமாக சிரித்தேன்.
அது தான் கடைசி சந்திப்பு.
இந்த கரோனா லாக்டவுன் போது
பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஒரு பதிவு க்ரியா ராமகிருஷ்ணன் பற்றி ஃபேஸ்புக்கில எழுதியிருந்த விஷயத்தை உடனடியாக செல் பேசியில் தெரிவித்தேன்.
வாட்ஸ் அப்பில் அவருக்கு அனுப்பி வைத்தேன்.
ரவிக்குமாரின்
அந்த பதிவின் லிங்க்
ட்விட்டரில் நான் ஷேர் செய்ததைப் பற்றி சொன்னேன்.