ரொம்ப நாள் காணாத படி பல நண்பர்கள் வாழ்விலிருந்து மறைந்து போவார்கள். திடீரென்று அவர்கள் தோன்றுவதுண்டு.
திருச்சியில் அப்படி ஒரு நாள் ஒரு நண்பனிடம் இருந்து போன் வந்தது. “கேபி! நானும் என் மனைவியும் வருகிறோம்.”
“Believe me. இனி நம்ப காலம் தான்.”
இவன் என்ன எனக்கு வழி காட்டப்போகிறான். ஒளிமயமான எதிர்காலத்திற்கான வழி.
நல்ல இளமையில் எப்போதும் நான் தான் இவனுக்கு செலவழித்திருக்கிறேன். He was a taker and sponger I met in my life.
மதுரையில் இருக்கும் போதும் சரி, சென்னையில் இருந்த போதும் சரி, என்னோடு இருக்கும்போது பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட் துவங்கி சாப்பிடுவது எல்லாம் என் செலவு தான்.
என்னை விளம்பர மாடல் ஆக்கப்போகிறானா? நிறைய விளம்பரப்படங்கள் நூற்றுக்கணக்கில் தயாரித்திருக்கிறேன் என்று போனில் சொல்கிறானே! ஆஹா! சினிமாவில் நடிகனாக முடியவில்லை என்றாலும் நான் விளம்பர மாடல் ஆகப்போகிறேன் போலுமா!
“என் மனைவியோட தம்பி மதுரையில் ஏற்பாடுகளை கவனிக்கிறான்.”
ஓ! மதுரையில் ஏதோ விளம்பரப் பட ஷூட்டிங் வேலைகள் நடக்கிறது போலுமோ?
“இது வரைக்கும் நடந்தத பத்தி ஒர்ரி பண்ணாத. இனி நம்ம காலம் ஆரம்பிக்குது!”
தனக்கு நல்ல காலம் என்று சொல்லாமல் நமக்கு என்று என்னையும் கூட சேத்துக்கிறானே! பரந்த மனசாயிருக்கும் போலும்.
நான் இப்படி யாராவது வாய்ப்பந்தல் போடும் போது சிலிர்க்கவே மாட்டேன்.
இது என்ன புஸ்வானமோ தெரியலையே?
சரி, ரொம்ப நாள் கழித்து ஒரு நண்பன் பார்க்க வருகிறான். அந்த அளவிற்கு மகிழ்ச்சி.
அவன் மீண்டும் போன் பண்ணி “கெக்ககெக்கக்கெக்கக்கே” என்று சிரித்தான்.
எனக்கு சட்டென்று ஒன்று தோன்றியது.
Amway ஆ இருக்குமோ?
அந்த நேரம் இந்த Amway obsession பிடித்து பலர் சொக்கிப்போய் தேவராஜ்ஜியம் சமீபத்து விட்டது என்ற பிரமையில் இருந்ததை பார்த்திருக்கிறேன்.
திருச்சியில் ஆம்வே பேசிய சிலரை முகத்தாட்சண்யம் பார்க்காமல் நிராகரித்திருக்கிறேன்.
தடுக்கி விழுந்தால் ஆம்வே. இன்னும் ரெண்டு மூணு வருசத்தில சர்வ நிச்சயமா காரு வாங்கணும், பங்களா வாங்கணும், எஸ்டேட் வாங்கணும்னு தவித்து தக்காளி வித்துக்கொண்டிருந்தான்கள்.
என் அப்பாவிடம் ஆம்வே சரக்குகளை சில ஆம்வே ஏஜண்ட்கள் தள்ளி விட்டு போயிருக்கிறான்கள்.
பெற்றோர் அப்போது வயலூர் ரோடு குமரன் நகரில். நான் என் குடும்பத்துடன் பிஷப் ஹீபர் காலேஜுக்கு எதிரே எம்.ஜி.ஆர் நகரில்.
மனைவியோடு வந்து சேர்ந்தான் நண்பன். தலை பெரும்பகுதி நரை.
எனக்கு நரையே இல்லை என்பதை பார்த்து டை அடித்திருக்கிறேனாக்கும் என்று அவன் மனைவி நினைத்து விட்டாள். இயற்கையாகவே அப்போது எனக்கு நரையில்லை.
இன்று வரை கூட நான் தலைக்கு டை அடித்ததேயில்லை. இப்போது எனக்கு நரை இருக்கிறது. முடி அடர்த்தி குறைந்து விட்டது.
அவன் மனைவியுடன் சாப்பிட்டு முடிக்கும் வரை நான் எதுவும் கேட்கவில்லை. அவன் ஆனால்
“ ஒளிமயமான எதிர்காலம்” பேசிக்கொண்டே தான் சாப்பிட்டான்.
“ ஆம்வே விஷயமா வந்திருக்கியா?”
“எப்படி கேபி கரெக்டா கண்டு பிடிச்சே”
நான் இதற்கெல்லாம் ஒத்துழைக்க மாட்டேன் என்பதை மெதுவாக சொன்னேன். அவனுக்கும் அவன் மனைவிக்கும் சுதி இறங்கி விட்டது.
ஆனால் அவன் மனந்தளராமல் மீண்டும் முருங்கை மரம் ஏறினான். என்னை எப்படியாவது பேசி கன்வின்ஸ் செய்து விடலாம் என்ற நம்பிக்கை.
மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் அடுத்தவனுக்கு வேலை பார்க்க வேண்டியதில்லை. நாமே சகல பலன்களையும் கொள்முதல் செய்வோம். இன்னும் அஞ்சு வருஷத்தில வாழ்க்கையில வசதி வாய்ப்போடு கைய கட்டிக்கிட்டு உக்காந்து சாப்பிடலாம்.
மறு நாள் ஆம்வே மீட்டிங்குக்கு நான் வரவேண்டும் என்று வலியுறுத்தினான். அந்த மீட்டிங்கில் எனக்கான டிக்கெட் அவனை எடுக்க விடாமல் நானே பணம் கொடுத்து விட்டேன்.
சகிக்க முடியவில்லை. சரியான கூட்டம். எனக்கு எல்லாமே வேடிக்கை தானே.
தெலுங்கு நடிகர் மாதிரி மேக் அப்பில் மேடையில் ஒருவன் தோன்றி சொன்னான். “ ஆம்வேயினால் நான் இன்று பெருங்கோடீஸ்வரன். முன்பெல்லாம் என் மனைவிக்கு சல்மான்கானைத் தான் பிடிக்கும். இப்போது உன்னுடைய ஹீரோ யார் என்று என் மனைவியை கேளுங்கள். ‘என் புருஷன் தான்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள்.”
இப்படி பெரிய ட்ராமா நடத்தினான் ஆம்வே கம்பெனிக்காரன். இதை நம்பி கூட்டம் பெரும் கரகோஷம்.
வீட்டிற்கு வந்தவுடன் நான் தீர்மானமாக நிராகரித்து சொன்னது அவனுக்கு ரசிக்கவில்லை.
தெரிந்தவர்கள், சொந்தக்காரர்கள், நண்பர்களிடம் ஆம்வே பொருட்கள் நிரம்பிய 4500 ரூபாய் கிட் ஒன்றை விற்க வேண்டுமாம். Chain Circulationல் ஒரு வருடத்திலிருந்து பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டும். நான் கோணிக்குள்ள கட்டோ கட்டு என்று கட்டப்போகிறேன்.
அவனிடம் ஆம்வே பற்றி என் பதில் இப்படி சொன்னேன். “ நான் என் நண்பர்கள், சொந்தக்காரர்கள் யாரையும் சுரண்ட விரும்பவில்லை. ஏமாற்ற விரும்பவில்லை.”
” இன்னும் சில வருடங்கள்ல (நீ என்னப் பாத்து) ரொம்ப வருத்தப்படுவே.” என்று சாபம் கொடுத்தான்.
அவன் மனைவி என் தர்ம பத்தினியிடம் “ அண்ணி, நீங்க அண்ணனுக்கு ரொம்ப செல்லம் குடுக்கிறீங்க. செல்லம் கொடுத்தே கெடுத்து வச்சிட்டீங்க”
என் மனைவியின் விருந்தோம்பலுக்கு நன்றியாக இந்த Compliment.
மறு நாள் கிளம்பினார்கள்.
தனிப்பட்ட முறையில் நான் என் அப்பாவிடம் அவர் காரை என் உபயோகத்திற்கு ஒரு நாளும் கேட்டதேயில்லை.
இவனுக்காக காரை கேட்டேன். என் அப்பாவின் காரில் இவர்கள் இருவரையும் பஸ் ஸ்டாண்டில் கொண்டு போய் விட்டு பஸ் ஏற்றி அனுப்பி வைத்தேன்.
மூன்று நாள் என் வீட்டில் விருந்துண்டவன் மீண்டும் எனக்கு அதன் பிறகு ஒரு போன் போடவேயில்லை.
சென்னையில் (15 வருடம் கழித்து) சென்ற வருடம் தற்செயலாக சந்தித்தேன். அவனுடைய Super Ego அப்படியே அவனிடம் இன்னும் எஞ்சியிருக்கிறது.
அப்படி ஒன்றும் பங்களா, கார், வசதியெல்லாம் இருக்கவில்லை. நண்பர்கள், உறவு யாரோடும் இணக்கமாகவும் அவன் இல்லை. ஏதோ தலைமறைவு வாழ்க்கை போல பிறர் அபிப்ராயப்பட்டார்கள்.
மனைவியையும் அவன் பிரிந்து விட்டதாக மற்ற ஒருவர் சொல்லி கேள்விப்பட்டேன். பாவம், பிரிவு தாற்காலிகமாக இருந்தால் நல்லது.
I see men's judgments are a parcel of their fortunes, and things outward
Do draw the inward quality after them
To suffer all alike.
- Shakespeare in 'Antony and Cleapatra'
………………………………………………